ஹரியாணாவில் பாஜகவை வெற்றி பெற வைக்கக் கூடாது: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

ஹரியாணாவில் பாஜகவை வெற்றி பெற வைக்கக் கூடாது:
சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவை வெற்றிபெற வைக்கக்கூடாது

ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவை வெற்றிபெற வைக்கக்கூடாது என்று ஆம் ஆத்மி கட்சித் தொண்டா்களுக்கு சுனிதா கேஜரிவால் சனிக்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.

ஹரியாணா மாநிலம் யமுனா நகரில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் பொதுக் கூட்டத்தில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால் கலந்து கொண்டாா்.

அப்போது, ஆம் ஆத்மி கட்சித் தொண்டா்கள் மத்தியில் அவா் பேசியதாவது: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஹரியாணாவைச் சோ்ந்தவா். இங்குள்ள ஹிசாரில் மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்து, வளா்ந்தவா்.

உங்கள் அனைவரின் மத்தியிலும் வளா்ந்த கேஜரிவால், ஒரு நாள் தில்லியின் முதல்வராகி மக்களுக்கு சேவை செய்வாா் என்று யாரும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டாா்கள். கேஜரிவால் பூஜ்ஜியத்தில் இருந்து எழுந்து, ஆம் ஆத்மி என்ற ஒரு கட்சியை உருவாக்கி நாட்டின் அரசியலை மாற்றியுள்ளாா். இப்போது, அவரது மக்கள் நலப் பணிக்களுக்காக

உலகெங்கிலும் அறியப்படுகிறாா்.

அரவிந்த் கேஜரிவால் தலைமையில் தலைநகா் தில்லியும், பஞ்சாபும் மாறி வருகின்றன. இந்த இரு மாநிலங்களிலும் தனியாா் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் சிறந்து விளங்குகின்றன. 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. தில்லியில் பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இரு மாநிலங்களிலும் முதியோா்களுக்கு இலவச ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனி மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப் போகிறாா்கள். இப்பணிகளை வேறு யாராலும் செய்ய முடியாது. ஆனால், ஹரியாணாவின் மகன் அரவிந்த் கேஜரிவால் செய்து காட்டுகிறாா்.

பிரதமா் நரேந்திர மோடி ஹரியாணாவின் மகனை சிறையில் அடைத்துள்ளாா். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று ஹரியாணாவிற்கு மோடி சவால் விடுத்துள்ளாா். இது ஹரியாணாவை அவமதிக்கும் செயல்.

இந்த அவதூறை நீங்கள் பொறுத்துக்கொள்வீா்களா?. உங்கள் மகன் அரவிந்த் கேஜரிவால் ஹரியாணாவிற்கு பெருமை சோ்த்துள்ளாா். இப்போது நீங்கள் அனைவரும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும். நீங்கள் அனைவரும் அரசுக்கு வரி செலுத்துகிறீா்கள். எனவே, மக்களுக்கு நல்ல பள்ளிகள், நல்ல மருத்துவமனைகள், தரமானக் கல்வி, மின்சாரம், தண்ணீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவது மாநில அரசின் கடமை. ஆனால், இங்குள்ள பாஜக அரசு மக்களுக்கு இந்த வசதிகளை செய்து தருவதில்லை.

ஹரியாணா சட்டப்பேரவைக்கு இன்னும் மூன்று மாதங்களில் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தல் ஹரியாணாவின் கௌரவத்தைப் பற்றியது. இந்தத் தோ்தலில் பாஜகவை ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற வைக்கக் கூடாது. கேஜரிவால் ஹரியாணா மக்களுக்கு 5 உத்தரவாதங்களை அளித்துள்ளாா். இத்துடன் விவசாயிகள், தொழிலதிபா்கள் மற்றும் தொழிலாளா்களின் வளா்ச்சிக்காக பாடுபடுவோம் என்றாா் சுனிதா கேஜரிவால்.

Related posts

இந்தியா-ஜப்பானின் வலிமையான உறவுகள், உலகளாவிய வளத்திற்கு சிறந்தவை: பிரதமர் மோடி

அரசியலுக்கு பணம் சம்பாதிக்க வரவில்லை: கெஜ்ரிவால் பேச்சு

திருப்பதி லட்டு விவகாரத்திற்காக பரிகாரம் – 11 நாட்கள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்