ஹரியாணாவில் பாஜக வெல்லும்! இவிஎம்-ஐ காங்கிரஸ் குறை சொல்லும்!

ஹரியாணாவில் பாரதிய ஜனதா கட்சி 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி தங்கள் தோல்விக்காக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீது குற்றம் சாட்டும் என முதல்வர் நயப் சிங் சைனி இன்று (அக். 6) விமர்சித்தார்.

ஹரியாணாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில், சைனி இவ்வாறு தெரிவித்தார்.

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கு நேற்று (அக். 5) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 67 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஹரியாணா தேர்தலையொட்டி வெளியான கருத்துக் கணிப்புகள் முடிவில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைப் பெற்று ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக பாஜக மூத்த தலைவரும் மாநில முதல்வருமான நயப் சிங் சைனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதையும் படிக்க | சொல்லப் போனால்… மகளிரால் மட்டுமே முடியும்!

கேள்விக்கு பதிலளித்த சைனி, ''மக்கள் அளித்திள்ள தீர்ப்பு என்ன என்பது அக்டோபர் 8ஆம் தேதி தெரியும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை காங்கிரஸ் கட்சி குறை சொல்லும். ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைப்போம்.

மாநிலத்தில் செய்துள்ள நலத்திட்டங்கள் அடிப்படையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். கருத்துக் கணிப்புகள் தனிக் கோட்பாட்டின் அடிப்படையில் இயங்குகிறது. அதனுடைய அமைப்பு வேறு. ஆனால், நாங்கள் களப்பணி செய்துள்ளோம். பாஜக தலைவர்கள் மக்களுடன் நேரடியாக இணைந்துள்ளனர். ஹரியாணாவில் 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்'' என சைனி குறிப்பிட்டார்.

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்