ஹரியாணா: அக்.25ல் தற்காலிக அவைத் தலைவராகப் பதவியேற்கிறார் ரகுவீர் சிங்!

சண்டீகர்: ஹரியாணா சட்டப்பேரவைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அக்டோபர் 25-ம் தேதி பதவியேற்றுக்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

15வது ஹரியாணா சட்டப் பேரவையின் தற்காலிக அவைத்தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவரும் கட்சியின் எம்எல்ஏவுமான ரகுவீர் சிங் காடியன்(80) பதவியேற்கவுள்ளார்.

அதற்கு முன்னதாக ரகுவீர் காடியனுக்கு ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா தற்காலிக அவைத்தலைவராகப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். இந்த தகவலை விதான் சபா செயலகத்திற்கு, மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக அக்.17ல் ஹரியாணாவின் முதல்வராக நயாப் சிங் சைனி இரண்டாவது முறையாக ஹரியாணாவின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில் முதல்வர் உள்பட 14 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியாணா பேரவையில் எம்எல்ஏக்கள் பதவியேற்ற பிறகு அவைத்தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நடத்தப்படுகிறது.

ஹரியாணா மாநிலத்தில் அக்.5-ம் தேதி நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றுத் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. காங்கிரஸ் 37 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சியாக உள்ளது.

ஹரியாணாவின் மூத்த சட்டப்பேரவை உறுப்பினரான காடியன், 2005 முதல் 2009 வரை பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது ஹரியாணா சட்டப்பேரவையின் சபாநாயகராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி