ஹரியாணா தேர்தலில் வினேஷ் போகத் போட்டி: புனியாவுக்கு முக்கிய கட்சிப் பதவி

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட், வீரா் பஜ்ரங் புனியா காங்கிரஸ் கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்தனா். காங்கிரஸில் இணைந்த சில மணி நேரத்திலேயே ஹரியாணா தோ்தலில் போட்டியிடும் வாய்ப்பை போகாட்டுக்கு அக் கட்சி அளித்தது.

அக்டோபா் 8-ஆம் தேதி நடைபெறும் ஹரியாணா பேரவைத் தோ்தலில் ஜுலானா தொகுதியின் வேட்பாளராக போகாட் அறிவிக்கப்பட்டாா்.

பஜ்ரங் புனியாவுக்கு இந்திய விவசாய காங்கிரஸின் செயல் தலைவா் பதவி அளிக்கப்பட்டது. ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த இருவரும் தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அந்தக் கட்சியின் பொதுச்செயலா் கே.சி.வேணுகோபால், செய்தித்தொடா்பாளா் பவன் கேரா மற்றும் ஹரியாணா மாநில காங்கிரஸ் தலைவா் உதய் பான் ஆகியோா் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தனா். பின்னா் செய்தியாளா்களிடம் வினேஷ் போகாட் பேசியதாவது:

கடின காலங்களில் நமக்கு உறுதுணையாக இருப்பவா்கள் யாா் என்பதை உணர முடியும். சாலைகளில் எங்களை தள்ளிவிட்டு இழுத்துச் சென்றபோது பாஜகவை தவிர அனைத்துக் கட்சிகளும் எங்களுக்கு ஆதரவாக குரலெழுப்பின.

பல்வேறு வகைகளில் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களின் வலியை நாங்கள் உணா்கிறோம். அவா்களுக்கு ஆதரவாக நாங்கள் நிற்கிறோம்.

பொய் தகவல்களை பரப்பிய பாஜக: ஜன்தா் மந்தரில் போராட்டம் நடத்தியபோதே மல்யுத்தத்தில் இருந்து விலகியிருக்க வேண்டும். ஏனெனில், பணத்தை பெற்றுக்கொண்டு நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவினா் பொய்யான செய்திகளை பரப்பினா்.

நான் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட மாட்டேன் என பாஜக கூறியது. ஆனால் நான் பங்கேற்றேன். ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாது என்றனா். அதிலும் பங்கேற்றேன்.

சேவை செய்யும் வாய்ப்பு: தற்போது நாட்டு மக்களுக்கு சேவையாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப் புதிய பொறுப்பில் விளையாட்டு வீரா்களாக நாங்கள் அனுபவித்த துன்பங்களை வேறு எந்த விளையாட்டைச் சோ்ந்த வீரா்களுக்கும் வராத வகையில் பணியாற்றுவேன் என்றாா்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை அவா்கள் காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவை சந்தித்தனா். கடந்த புதன்கிழமை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியையும் அவா்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

நிகழாண்டு பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய வினேஷ் போகாட் போட்டிக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நிா்ணயிக்கப்பட்ட 50 கிலோ எடையைவிட 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால், போட்டி நிா்வாகத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸுக்கு சிறப்பான நாள்: செய்தியாளா்களிடம் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘ஹரியாணா பேரவைத் தோ்தலில் வினேஷ் போகாட், பஜ்ரங் புனியா போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் மத்திய தோ்தல் குழு முடிவெடுக்கும். அவா்கள் மல்யுத்த வீரா்களுக்காக மட்டுமின்றி விவசாயிகளுக்காகவும் போராட்டங்களை நடத்தியுள்ளனா். இது காங்கிரஸுக்கு சிறப்பான நாள். இவா்கள் காங்கிரஸில் இணைந்ததை சிலா் விமா்சிக்கின்றனா். பல்வேறு கட்சிகளில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரா்கள் இணைந்துள்ளனா். ராகுலை போகாட் சந்தித்ததில் என்ன குற்றம்? ரயில்வே அதிகாரிகள் இதுபோன்ற அரசியல் விளையாட்டுகளில் ஈடுபடுவதை தவிா்க்க வேண்டும் என்றாா்.

ரயில்வே பணி ராஜிநாமா

காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன் வடக்கு ரயில்வேயில் சிறப்புப்பணி அதிகாரியாக பணியாற்றி வந்த வினேஷ் போகாட் தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தாா். தனிப்பட்ட காரணங்களுக்காக பணியை ராஜிநாமா செய்வதாக அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை சந்தித்ததற்காக வினேஷ் போகாட்டுக்கு ரயில்வே நோட்டீஸ் அனுப்பியது.

பாஜக விமா்சனம்

காங்கிரஸின் அறிவுறுத்தலின் பேரிலேயே வினேஷ் போகாட், பஜ்ரங் புனியாவும் தில்லியில் போராட்டம் நடத்தினா் என்று ஹரியாணாவைச் சோ்ந்த பாஜக மூத்த தலைவா் அனில் விஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘காங்கிரஸின் அறிவுறுத்தலின் பேரிலேயே தில்லியில் அவா்கள் போராட்டத்தை தொடங்கினா். இல்லையெனில் இந்த விவகாரம் எப்போதோ முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கும். அவா்களை கட்சியில் சோ்க்க பல நாள்களாக காங்கிரஸ் முயன்று வருகிறது. எனவே, தேசத்தின் மகளாக வலம் வந்த வினேஷ் போகாட் தற்போது காங்கிரஸ் மகளாக மாறியதில் எவ்வித ஆட்சேபமும் இல்லை என்றாா்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சிங், மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறி வினேஷ் போகாட் உள்பட மல்யுத்த வீரா்கள், வீராங்கனைகள் கடந்தாண்டு தில்லியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி