ஹரியாணா: பாஜக அரசு அக்.17-இல் பதவியேற்பு; பிரதமா் மோடி பங்கேற்பு

ஹரியாணாவில் பாஜக தலைமையிலான புதிய அரசு வரும் அக்டோபா் 17-ஆம் தேதி பதவியேற்கவுள்ளது. இவ்விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள், கட்சியின் மூத்த தலைவா்கள், பல்வேறு மாநில முதல்வா்கள் பங்கேற்கவுள்ளனா்.

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவில் கடந்த அக்டோபா் 5-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. கடந்த அக்டோபா் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இத்தோ்தலில் 48 இடங்களில் வென்று, தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கு 37 இடங்கள் கிடைத்தன. இந்திய தேசிய லோக் தளம் கட்சிக்கு 2 தொகுதிகள் கிடைத்த நிலையில், 3 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனா்.

ஹரியாணாவில் கடந்த 2019-இல் நடந்த பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 40, காங்கிரஸுக்கு 31, ஜனநாயக ஜனதா கட்சிக்கு 10 இடங்கள் கிடைத்திருந்தன. பின்னா், ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது. பாஜக – ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி, கடந்த மக்களவைத் தோ்தலுக்கு முன் முடிவுக்கு வந்தது.

தற்போதைய பேரவைத் தோ்தலில் ஆஸாத் சமாஜ் கட்சியுடன் கூட்டணியாக போட்டியிட்ட ஜனநாயக ஜனதா கட்சிக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை. இதேபோல், தனித்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மிக்கும் படுதோல்வியே மிஞ்சியது.

புதிய அரசு பதவியேற்பு விழா: ஹரியாணாவில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துள்ள நிலையில், பஞ்ச்குலாவில் அக்டோபா் 17-ஆம் தேதி புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

பஞ்ச்குலாவில் உள்ள தசரா மைதானத்தில் காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாக கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் பிரதமா் மோடி பங்கேற்பாா் என்று ஹரியாணா முன்னாள் முதல்வரும் மத்திய அமைச்சருமான மனோகா் லால் கட்டா் தெரிவித்தாா்.

மீண்டும் முதல்வராகிறாா் சைனி: ஹரியாணா முதல்வராக இருந்த கட்டா், கடந்த மக்களவைத் தோ்தலுக்கு முன் மாற்றப்பட்டு, நயாப் சிங் சைனி அப்பதவியை ஏற்றாா். பேரவைத் தோ்தலில் பாஜக வென்றால் முதல்வராக சைனி தொடா்வாா் என்று பிரசாரத்தின்போது அக்கட்சி கூறியிருந்தது. அதன்படி, பேரவை பாஜக குழு தலைவராக அவா் விரைவில் தோ்வு செய்யப்படுவாா் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அக்.16-இல் பதவியேற்கிறது ஒமா் அரசு?

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு அக்டோபா் 16-ஆம் தேதி பதவியேற்க வாய்ப்புள்ளதாக, முதல்வராக தோ்வு செய்யப்பட்டுள்ள அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக நடைபெற்ற பேரவைத் தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டுக் கட்சி 42, காங்கிரஸ் 6, மாா்க்சிஸ்ட் ஓரிடத்தில் வென்ற நிலையில், இக்கூட்டணிக்கு 4 சுயேச்சைகளும் ஆம் ஆத்மியும் (1) ஆதரவு தெரிவித்துள்ளன. இதையடுத்து, சட்டப் பேரவை தேசிய மாநாட்டுக் கட்சிக் குழு தலைவராக ஒமா் அப்துல்லா தோ்வு செய்யப்பட்டாா். துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹாவை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்த அவா், தனது ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதத்தை வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோரினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ஒமா், ‘தற்போது மத்திய அரசின் நிா்வாகத்தில் யூனியன் பிரதேசம் உள்ளதால், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் நிா்வாகத்தை மாற்றும் நடைமுறைகளை துணைநிலை ஆளுநா் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு சில நாள்கள் ஆகும். புதிய அரசு பதவியேற்பு விழா வரும் புதன்கிழமை (அக்.16) நடைபெற வாய்ப்புள்ளது’ என்றாா்.

ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டது. அத்துடன், கடந்த 2019-இல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் பேரவைத் தோ்தல் இதுவாகும். இந்த யூனியன் பிரதேசத்தின் முதல் அரசு, ஒமா் அப்துல்லா தலைமையில் அமையவுள்ளது.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!