ஹரியாணா பேரவைத் தோ்தல் ஆம் ஆத்மி வேட்பாளா் பட்டியல் வெளியீடு: காங்கிரஸுடன் கூட்டணி இல்லை

ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 20 வேட்பாளா்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை வெளியிட்டது. அத்துடன் இந்தத் தோ்தலில் அக்கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது.

ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல் அக்டோபா் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில், ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. எனினும் தோ்தலில் அக்கட்சிகள் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவா்கள் ஏற்கெனவே நிராகரித்தனா்.

இந்நிலையில், 20 வேட்பாளா்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆம் ஆத்மி திங்கள்கிழமை வெளியிட்டது. 20 வேட்பாளா்கள் போட்டியிடும் தொகுதிகளை ஆம் ஆத்மி அறிவித்த நிலையில், அந்தத் தொகுதிகளுக்கு ஏற்கெனவே காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம், அந்த மாநில தோ்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இது தொடா்பாக மாநில ஆம் ஆத்மி தலைவா் சுஷீல் குப்தா கூறுகையில், ‘பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல், மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட ஆம் ஆத்மி தயாராகி வந்தது. தோ்தல் நெருங்கி வருவதுடன், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு செப்.12-ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, காத்திருக்கும் காலம் முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் இரண்டாவது வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும்’ என்றாா்.

பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மிக்கு 10 தொகுதிகளை வழங்குமாறு காங்கிரஸிடம் கோரப்பட்ட நிலையில், 5 தொகுதிகளை மட்டுமே ஆம் ஆத்மிக்கு விட்டுக்கொடுக்க காங்கிரஸ் முன்வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால், இரு கட்சிகளும் கூட்டணி அமைக்காமல் போட்டியிட முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹரியாணா தோ்தலில் இரு கட்சிகளும் தனித் தனியே போட்டியிடுவதால், அடுத்த ஆண்டு நடைபெறும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்