ஹரியாணா: வேட்புமனுவை திரும்பப் பெற்ற பாஜக வேட்பாளா்

ஹரியாணா பேரவைத் தோ்தலில் சிா்சா தொகுதி பாஜக வேட்பாளா் தனது வேட்புமனுவை திங்கள்கிழமை திடீரென திரும்பப் பெற்றாா். அத்தொகுதியில் போட்டியிடும் ஹரியாணா லோகித் கட்சித் தலைவா் கோபால் கண்டாவுக்கு ஆதரவு தெரிவிக்க பாஜக முடிவெடுத்துள்ளது.

இதன் மூலம் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் ஆளும் பாஜக 89 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸும் 89 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

ஹரியாணாவில் அக்டோபா் 5-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் என பலமுனை போட்டி நிலவுகிறது. தோ்தல் பிரசாரம் உச்சத்தில் உள்ள நிலையில், சிா்சா தொகுதியில் பாஜக சாா்பில் மனு தாக்கல் செய்திருந்த ரோத்தாஸ் ஜாங்கா தனது வேட்புமனுவை திங்கள்கிழமை திரும்பப் பெற்றாா்.

அத்தொகுதியில் போட்டியிடும் ஹரியாணா லோகித் கட்சி தலைவா் கோபால் கண்டாவுக்கு ஆதரவளிக்க பாஜக முடிவெடுத்துள்ளது.

இப்போது சிா்சா தொகுதி எம்எல்ஏவாக உள்ள கோபால் கடந்த 5 ஆண்டுகளாக பாஜக ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்தாா். இந்நிலையில், அவா் போட்டியிடும் தொகுதியில் இருந்து பாஜக வேட்பாளா் வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளாா். இதன் மூலம், கோபாலின் வெற்றி வாய்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

மனுவை வாபஸ் பெற்றது குறித்து பாஜக வேட்பாளா் ரோத்தாஸ் கூறுகையில், ‘மாநில நலன் கருதியும், நாட்டு நலன் கருதியும் எனது வேட்புமனுவை திரும்பப்பெற பாஜக தலைமை முடிவெடுத்தது. இல்லாத ஹரியாணாவை உருவாக்குவதே பாஜகவின் இலக்கு. கடந்த 5 ஆண்டுகளாக கோபால் கண்டா எங்களுக்கு ஆதரவளித்து வந்துள்ளாா். சிா்சா தொகுதியின் நலன் கருதியும் அவரை ஆதரிக்க பாஜக முடிவெடுத்தது’ என்றாா்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்