ஹரியானா : காங்கிரஸ் – ஆம் ஆத்மி கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி!

காங்கிரஸ் – ஆம் ஆத்மி கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி! ஹரியானாவில் பா.ஜ.க.வுக்கு மீண்டும் வாய்ப்பு

90 தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான இடம் 46 தொகுதிகள். இந்த 90 தொகுதிகளுக்கு வரும் அக். 5ம் தேதி வாக்குப் பதிவும், அக். 8ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. கடந்த 2019 தேர்தலில் பா.ஜ.க. 40 தொகுதிகளை வென்று, பிறகு 10 தொகுதிகளை வென்றிருந்த ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. இந்தக் கூட்டணி 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக முறிவுற்றது.

விளம்பரம்

இந்த பின்னணியில் தற்போது 2024 சட்டமன்றத் தேர்தல் அங்கு நடைபெறவுள்ளது. அக். 5ம் தேதி வாக்குப் பதிவு நடக்கவிருக்கும் நிலையில், செப். 12ம் தேதி மனு தாக்கலுக்கான கடைசி நாளாக உள்ளது. இதனால், அரசியல் கட்சியினர் தீவிரமாக தங்களது கூட்டணிகளை பேசுவது, தொகுதி பங்கீடுகளை முடிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் தீவிரமாக இயங்கிவருகின்றன. பா.ஜ.க இந்த முறை தனித்து போட்டியிடுகிறது.

கடந்த முறை பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருந்த துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி, இந்த முறை பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. காங்கிரஸும், ஆம் ஆத்மியும் தனித்து போட்டியா, கூட்டணியா என அரசியல் வட்டாரத்திலும் தொண்டர்கள் மத்தியிலும் குழப்பம் இருந்துவந்த நிலையில், கடந்த சில தினங்களாக இரு கட்சியும் கூட்டணி அமைப்பதாக தகவல்கள் வெளியாகின.

விளம்பரம்

இதனை உறுதி செய்யும் வகையிலேயே, சில தினங்களுக்கு முன்பு ஆம் ஆத்மியுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவித்த ஹரியானா மாநிலத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் தீபக் பாபாரியா, “இருவரும் பயனடையும் வகையில் பேசுகிறோம். ஓரிரு தினத்தில் முடிவு செய்வோம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று காங்கிரஸ் – ஆம் ஆத்மி கூட்டணி இல்லை. இரு கட்சிகளும் தனித்தே போட்டி என தெரியவந்துள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக ஆம் ஆத்மி 20 தொகுதிகளுக்கு தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் ஹரியானாவில் 31 பெயர்களைக் கொண்ட தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்திருந்த நிலையில் நேற்று (8ம் தேதி) 9 பெயர்களைக் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டிருந்தது. தற்போது ஆம் ஆத்மி வெளியிட்டிருக்கும் 20 பெயர் கொண்ட பட்டியலில் 11 தொகுதிகளில் காங்கிரஸுடன் நேரடியாக போட்டியிடுகிறது.

விளம்பரம்

கூட்டணி எட்டப்படாதது குறித்து வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, காங்கிரஸ் கூட்டணியில் ஆம் ஆத்மி 10 அல்லது அதற்கும் மேற்பட்ட இடங்களை கேட்டதாகவும், ஆனால் காங்கிரஸ் 5 அல்லது 3 இடங்களை மட்டுமே கொடுப்போம் என்றதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே கூட்டணி அமைக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

தற்போது மாநில கட்சிகள் ஒரு கூட்டணியிலும், தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகியவை தனிதனியே களத்தில் உள்ளன. இதனால், வாக்குகள் நான்கு முனைகளாக பிரிந்து, ஏற்கனவே மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு அதிகம் என்றும் சொல்லப்படுகிறது. அதேசமயம், பா.ஜ.க.வின் தொடர் 10 வருட ஆட்சியால் மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதேசமயம் நான்கு முனை போட்டி நிலவுவதால் இந்த முறையும் தனி பெரும்பான்மைக் கொண்ட ஆட்சி அமையாது. எந்தக் கட்சியாக இருந்தாலும் கூட்டணி ஆட்சியே அமைக்க முடியும் எனும் கருத்தும் நிலவிவருகிறது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
BJP
,
Congress
,
haryana
,
Latest News

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்