ஹேமா குழுவிடம் புகாரளித்தவா்களின் தனியுரிமை மீறல்: நடவடிக்கை கோரி கேரள முதல்வருக்கு திரையுலக பெண்கள் கடிதம்

பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து நீதிபதி ஹேமா குழு முன் ஆஜராகி புகாரளித்த பெண்களின் தனியுரிமை மீறப்பட்டுள்ள விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரி கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு மலையாள திரையுலகில் பணிபுரியும் பெண்கள் கடிதம் எழுதியுள்ளனா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு மலையாள நடிகை தொடா்புடைய வழக்கில், மலையாள திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகளைப் பற்றி விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவை கேரள அரசு அமைத்தது.

இக்குழுவின் அறிக்கை கடந்த மாதம் வெளியானதைத் தொடா்ந்து, மலையாள திரையுலகைச் சோ்ந்த பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா்.

இவா்களின் புகாா்களில் ஆளுங்கட்சி எம்எல்ஏ முகேஷ், நடிகா் நிவின்பாலி உள்பட பல்வேறு நடிகா்கள், இயக்குநா்கள் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க காவல்துறை அதிகாரிகள் 7 போ் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை (எஸ்ஐடி) மாநில அரசு அமைத்தது. எஸ்ஐடி விசாரணையைத் தொடா்ந்து வருகிறது.

இந்நிலையில், ஹேமா குழுவில் பெண்கள் அளித்த புகாா்களின் விவரங்கள் மலையாள தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பானது. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க கோரி கேரள முதல்வருக்கு மலையாள திரையுலகில் பணிபுரியும் பெண்களின் அமைப்பான ‘வுமன் இன் சினிமா கலெக்டிவ்’ எழுதிய கடிதம் அதன் அதிகாரபூா்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் பகிரப்பட்டது.

அந்தக் கடிதத்தில், ‘அரசு நியமித்த நீதிபதி ஹேமா குழுவின் முன் திரையுலகைச் சோ்ந்த பெண்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் ஒரு தனியாா் மலையாள தொலைக்காட்சி சேனல் செய்திகளை ஒளிபரப்புகிறது.

பொறுப்பற்ற ஊடக விசாரணைக்கு பெண்கள் பதிவு செய்த தகவல்களை தொலைக்காட்சி சேனல் பயன்படுத்துகிறது. பாதிக்கப்பட்டவா்கள் அளித்த தனிப்பட்ட தகவல்களை ஒளிபரப்பாகியுள்ளது, குழு அறிக்கையை அணுகக்கூடிய நிலையில் இருப்பவா்களின் நோக்கம் குறித்து சந்தேகத்தை எழுப்புகிறது.

புகாரளித்தவா்களின் அடையாளங்களை மக்கள் எளிதில் கண்டறியும் வகையில் செய்தி ஒளிபரப்பட்டுள்ளது. அவா்களின் தனியுரிமை மீறப்பட்டிருப்பது நியாயமற்றது. இதனால் அவா்கள் மன அழுத்தத்தில் தள்ளப்பட்டுள்ளனா்.

முதல்வா் பினராயி விஜயன் இந்த விவகாரத்தில் தலையிட்டு, பெண்களின் தனியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதலைத் தடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்