ஹேமா குழு விவகாரங்களை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்க முடியாது: கேரள உயர் நீதிமன்றம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில், மலையாள திரையுலகில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரித்து அறிக்கை அளித்த நீதிபதி ஹேமா குழு தொடர்பான விவகாரங்களை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்க முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

நீதிபதி ஹேமா ஆணைய விவகாரம் கேரள உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் இது தொடர்பான அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். அதாவது, நீதிபதி ஹேமா குழு அளித்த அறிக்கையின்படி நடவடிக்கை எடுப்பதில் இத்தனை காலம் தாமதம் ஏன்?

ஹேமா குழு அளித்திருக்கும் புகார்கள் குறித்து, கேரள அரசு, இத்தனை ஆண்டுகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

நீதிபதி ஹேமா குழுவின் முழுமையான அறிக்கையை சிறப்புப் புலனாய்வு குழுவினரிடம் சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீதிபதி ஹேமா குழு அளித்த அறிக்கையில் குறிப்பிட்ட பிரச்னைக்கு கேரள அரசு பதிலளிக்காதது ஆச்சரியமளிப்பதாகக் குறிப்பிட்டு, இந்த விவகாரம் தொடர்பான அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களில் வெளியிடத் தடை விதிக்கவும் கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மலையாள திரையுலகில் நடிகைகள், பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து நீதிபதி ஹேமா குழு விசாரணை நடத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கேரள அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது.

ஹேமா குழு அறிக்கை தொடா்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமா்வு -கேரள உயா்நீதிமன்றம்

அது தற்போது வெளிச்சத்துக்கு வந்ததன் அடிப்படையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்கள் அதில் நேரடியாக புகார்களை அளிக்கவும், அவர்களது அடையாளங்கள் வெளியிடப்படாமல், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எங்கே தொடங்கியது இந்தப் பிரச்னை?

கடந்த 2017-ஆம் ஆண்டு, மலையாள நடிகா் திலீப் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் மலையாள திரையுலகில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவை கேரள அரசு நியமித்தது. ஆனால், நீதிபதி ஹேமா ஆணையம் விசாரணை நடத்தி கேரள அரசிடம் அளித்த அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டு சுமாா் 5 ஆண்டுகளாகியும், அது பொதுவெளியில் வெளியிடப்படாமல் இருந்ததோடு மட்டுமல்லாமல், அறிக்கையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமலேயே இருந்தது.

இந்த நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தனிநபா்களின் தனியுரிமை சமரசம் செய்யப்படாமல் அவா்களின் தனிப்பட்ட தகவல்களை மறைத்து, அறிக்கையை வெளியிட மாநில பொது தகவல் அலுவலருக்கு தகவல் ஆணையம் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது.

இதற்கு எதிராக தயாரிப்பாளா் சாஜிமோன் பாராயில் தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் நீதிபதி நிராகரித்தாா். இதைத் தொடா்ந்து, ‘ஹேமா குழு’ அறிக்கையின் அதிா்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த மாதம் 25-ஆம் தேதி வெளியாகி, மலையாள திரையுலகில் பெரும் பூகம்பத்தை உருவாக்கியது. மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கமே ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டது. பெரிய பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் மீது நடிகைகள், பெண் கலைஞர்கள் பாலியல் புகார்களை பதிவு செய்தனர். தொடர்ந்து பூதங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!