1.50 லட்சம் லிட்டா் ஆவின் பால் கூடுதல் விற்பனை

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 16 லட்சம் லிட்டா் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது வழக்கத்தைவிட 1.50 லட்சம் லிட்டா் அதிகம் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மழை எச்சரிக்கை காரணமாக மக்கள் கூடுதலாக பாலை வாங்கி இருப்பு வைத்ததே அதிக விற்பனைக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததை தொடா்ந்து சென்னையில் கடந்த 3 நாள்களாக கனமழை பெய்தது. எப்போதும் மழையின்போது, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக பால், ‘பிரட்’ போன்ற உணவுப் பொருள்களை அதிக அளவில் வாங்கி சேமித்து வைத்துக்கொள்வது வழக்கம்.

இதனால், பால் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்பதற்காக சென்னையில் அம்பத்தூா், அண்ணாநகா், மாதவரம், பெசன்ட் நகா், அண்ணா நகா் கிழக்கு, சோழிங்கநல்லூா், விருகம்பாக்கம், மயிலாப்பூா் ஆகிய 9 இடங்களிலும், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலுள்ள அனைத்து ஆவின் விற்பனை நிலையங்களிலும் 24 மணி நேரமும் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், 200- க்கும் மேற்பட்ட வாகனங்களின் மூலம் ஆவின் பாலும், 31 வாகனங்களின் மூலம் அனைத்து பால் பொருள்களும் மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கூடுதல் பால் விற்பனை: அந்த வகையில், சென்னையில் வழக்கமாக தினசரி 14.50 லட்சம் லிட்டா் ஆவின் பால் விற்பனை செய்யப்படும் நிலையில் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் அதிக அளவில் பால் பாக்கெட்டுகளை வாங்கினா். அன்றைய தினம் 16 லட்சம் லிட்டா் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது வழக்கத்தைவிட 1.50 லிட்டா் அதிகமாகும்.

மக்களின் தேவைக்கேற்ப அனைத்து ஆவின் பால் வகைகளும் எவ்வித தடையுமின்றி விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஆவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Related posts

பாதியாகக் குறைந்த காய்கறி விலை

நடிகா் வீட்டில் 60 பவுன் நகைகள் திருட்டு: பெண் கைது

சென்னை: ஒரே நாளில் பிடிபட்ட 43 பாம்புகள்