100 நாள்களில் நடந்தது என்ன? ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை கேலி செய்தனர்!

நரேந்திர மோடி 3வது முறையாக ஆட்சி அமைத்து 100 நாள்களில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அடங்கிய புத்தகத்தை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று (செப். 17) வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், கடந்த 100 நாள்களில் ரூ.15 லட்சம் கோடிக்கு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமா் மோடியின் மூன்றாவது ஆட்சி நேற்றுடன் (செப். 16) நூறு நாள்களை நிறைவு செய்தது.

18-ஆவது மக்களவைத் தோ்தல் முடிவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தது. பிரதமராக நரேந்திர மோடி தொடா்ந்து மூன்றாவது முறையாக கடந்த ஜூன் 9-ஆம் தேதி பொறுப்பேற்றாா். அவருடன் 72 அமைச்சா்கள் கொண்ட மத்திய அமைச்சரவையும் பதவியேற்றது.

தோ்தலுக்கு முன்னதாகவே அடுத்த ஆட்சியில் முதல் 100 நாள்களுக்கான செயல்திட்டத்தை தயாா்ப்படுத்திக்கொள்ளுமாறு அமைச்சகங்களுக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், நரேந்திர மோடி 3வது முறையாக ஆட்சி அமைத்து 100 நாள்களில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அடங்கிய புத்தகத்தை உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ரயில்வேத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களிடம் பேசியதாவது, ''உலகின் உற்பத்தி மையமாக இந்தியா விளங்குகிறது என்பதை என்னால் பெருமையுடன் சொல்ல முடியும்.

நமது டிஜிட்டல் இந்தியா திட்டத்தை உலகின் பல்வேறு நாடுகள் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றன. அதனைத் தங்கள் நாட்டு வளர்ச்சியின் அடிப்படையாக்க முயற்சிக்கின்றனர்.

மோடி 3வது முறையாக ஆட்சி அமைத்த இந்த 100 நாள்களில் ரூ.15 லட்சம் கோடிக்கு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

மேன் இன் இந்தியா திட்டத்தை தொடங்கும்போது பலர் கேலி செய்தனர். ஆனால் இன்று மகத்தான பலனைக் கொடுத்து வருகிறது.

10 ஆண்டுகளில் வெளிப்புறப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வலுப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளோம்.

60 கோடி இந்தியர்களுக்கு வீடுகள், கழிப்பறைகள், குடிநீர், மின்சார வசதி ஆகியவை கிடைத்துள்ளன. இலவச ரேஷன் மற்றும் ரூ. 5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. அடுத்தமுறை தேர்தலை சந்திக்கும்போது சொந்தமாக வீடு இல்லாதவர்கள் இல்லை என்ற நிலை ஏற்படும்.

விண்வெளித் துறையில் இந்தியாவுக்கு பிரகாசமாக எதிர்காலம் உண்டு என்பதை உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளின் மீது உலக நாடுகள் கவனம் திரும்பியுள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை இந்த ஆட்சிக்கால முடிவுக்குள் அமல்படுத்துவோம்

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் வகையில் கூகி மற்றும் மைதேயி இனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்'' எனக் குறிப்பிட்டார்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்