‘100 நாள் நிறைவு; பாஜக அரசு தோற்றுவிட்டது’ – காங்கிரஸ் விமர்சனம்!

மூன்றாவது ஆட்சியின் 100 நாள் நிறைவில் மோடியின் பாஜக அரசு தோற்றுவிட்டதாக காங்கிரஸ் விமரிசித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்று இன்றுடன் 100 நாள்கள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி இந்த 100 நாளில் நாட்டில் நடந்த பல்வேறு சம்பவங்களைக் குறிப்பிட்டு பாஜக அரசை விமர்சனம் செய்துள்ளது காங்கிரஸ்.

தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட்,

'பிரதமர் மோடியின் 'யூ-டர்ன்' அரசாங்கம் கடந்த நூறு நாட்களாக செயல்பட்டு வருகிறது. இந்த 100 நாள்களில் மக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளனர். ஒவ்வொன்றிலும் மோடி அரசு தோற்றுப்போய்விட்டது.

இந்த நாட்டின் ஜனநாயகம், எதிர்க்கட்சி மற்றும் மக்களை திசைதிருப்ப இந்த அரசு நிர்பந்தித்தது. பாஜக அரசின் தவறான முடிவுகள் மக்களைப் பாதித்தால் கண்டிப்பாக அது மாற்றப்பட வேண்டும். வக்ஃப் வாரிய மசோதா போன்ற ஜனநாயகத்துக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்படக் கூடாது.

இந்தியா கூட்டணியின் தொடர் அழுத்தத்தின் காரணமாக வக்ஃப் வாரிய மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதுபோல நேரடி நியமனம் ரத்து, தகவல் தொடர்பு மசோதா, தேசிய ஓய்வூதியத் திட்ட மசோதா ஆகியவற்றில் பாஜக அரசு தன்னுடைய முடிவை மாற்றியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் ஆணவம் இனி வேலை செய்யாது.

இந்த 100 நாள்களில் 38 ரயில் விபத்துகள் ஏற்பட்டுள்ளன, 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை சிறிய விபத்துகள் என்று ரயில்வே அமைச்சர் கூறுகிறார்.

காஷ்மீரில் 26 முறை பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 21 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர், மக்களில் 15 பேர் இறந்துள்ளனர். இதற்கெல்லாம் யார் பொறுப்பு ? இதைப்பற்றி பிரதமர் மோடி பேசுவாரா?

பாலங்கள், சாலைகள், சிலைகள், விமான நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்புகள் முற்றிலுமாக சிதைந்துவிட்டன.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் முதல் அயோத்தி புதிய ராமர் கோயில் வரை பிரச்னைகள் உள்ளன.

இந்த 100 நாள்களில் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக 104 குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மேற்குவங்கத்தில் நடக்கும் பிரச்னை பற்றி மட்டும் பேசும் பாஜகவினர் ஏன் பிகார் , உத்தர பிரதேசத்தில் நடக்கும் குற்றங்கள் பற்றி பேச மறுக்கிறார்கள்?

மணிப்பூர் பற்றி பிரதமர் மோடியின் திட்டம் என்ன? கடந்த 16 மாதங்களாக மணிப்பூர் எரிந்துகொண்டிருக்கிறது, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது, இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஏன் மணிப்பூர் செல்ல மறுக்கிறார்? தான் வாழவேண்டும் என்பதற்காக நாட்டின் பிரச்னைகளை கண்டும் காணாததும் போல இருக்கிறார்' என பாஜக அரசுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்