11,500 கன அடிக்கு பதில் 8,000 கன அடி நீர் திறக்க முடிவு!

11,500 கன அடிக்கு பதில் 8,000 கன அடி நீர் திறக்க முடிவு!தமிழ்நாட்டிற்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு. ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் சித்தராமையா ஏ.என்.ஐ.

தமிழ்நாட்டிற்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 11,500 கனஅடி வீதம் நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீரை பிலிகுண்டுலுவில் திறப்பதை கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழு அறிவுறுத்தியிருந்த நிலையில், கர்நாடக அரசு இம்முடிவை அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று (ஜூலை 14) நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் உள்பட அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பான காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் சித்தராமையா,

''இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜகவினரும் பங்கேற்றனர். கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்றும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவில் மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் மோகன் கதார்கி பரிந்துரையின்படி 8,000 கன அடி நீர் திறந்து விட முடிவு செய்துள்ளோம். மழையின் அளவைப் பொறுத்து நீர் திறப்பை அதிகரிப்பது குறித்து முடிவு செய்வோம்'' எனக் குறிப்பிட்டார்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்