12 தமிழக மீனவர்களுக்கு தலா ரூ.42 லட்சம் அபராதம்: இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு

12 தமிழக மீனவர்களுக்கு தலா ரூ.42 லட்சம் அபராதம்: இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 தமிழக ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களுக்கு தலா 1.5 கோடி இலங்கை ரூபாய் (இந்திய மதிப்பில் ரூ.42 லட்சம்) அபராதம் விதித்து புத்தளம் நீதிமன்றம் இன்று (செப்.3) தீர்ப்பு அளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் இருந்து அந்தோணி மகாராஜா என்பவருக்கு சொந்தமான ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகில் கடலுக்குச் சென்ற 12 மீனவர்களை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அன்று இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 12மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட படகு மற்றும் வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு இன்று பிற்பகல் புத்தளம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அயோனா விமலரத்ன, 12 மீனவர்களுக்கும் தலா இலங்கை ரூ. 1.5 கோடி (இந்திய மதிப்பில் ரூ.42 லட்சம்) அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அபராதத்தை கட்ட தவறும் பட்சத்தில் தலா ஒவ்வொரு மீனவரும் ஆறு மாத காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும், கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஒரு விசைப்படகை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைப்பற்றி படகிலிருந்த சரண் (24), பாலா (29), கணேசன் (32) பரமசிவம் (51) ஆகிய நான்கு மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன், 3 மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீண்டும் மீன்பிடித்தால் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்ற நிபந்தனையில் அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும், விசைப்படகின் ஓட்டுநர் சரண் என்பவருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.விடுதலை செய்யப்பட்ட 3 மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Related posts

பங்குச் சந்தை உயர்வு: 90 சதவீத சிறு முதலீட்டாளர்களுக்கு இழப்பு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்: 8-வது நாளாக மனோஜ் ஜரங்கே உண்ணாவிரதம்.. உடல்நிலை பாதிப்பு

3 நாள் அமெரிக்க பயணம் நிறைவு: டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி