133 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை வென்று அசத்தியுள்ளது.

டாஸ்

இந்தியா -வங்கதேசம் அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி பன்னாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் களம்புகுந்தனர். அபிஷேக் சர்மா ஒரு பவுண்டரி விளாசிய நிலையில் 4 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். 2-வது ஓவரில் தொடர்ந்து தொடர்ச்சியாக 4 பவுண்டரிகள் அடித்து வெளுத்து வாங்கினார் சஞ்சு சாம்சன்.

சஞ்சு சாம்சன்

வாணவேடிக்கை காட்டிய சஞ்சு சாம்சன் – சூர்யகுமார் யாதவ்

அவரைத் தொடர்ந்து வந்த இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் சேர்ந்து ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டினர். இருவரின் அதிரடியால் அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறியது. இதனால் இந்திய அணி பவர் ப்ளேயான முதல் 6 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 82 ரன்களைக் குவித்தது. இது சர்வதேச டி20 போட்டிகளில் பவர்ப்ளேயில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோரானது.

கடந்த ஆட்டங்களில் சரியாக விளையாடாத சஞ்சு சாம்சன் 22 பந்துகளில் அரைசதம் விளாசினார். ரிசாத் ஹொசன் வீசிய ஓவரில் முதல் பந்து டாட் பால் ஆக அடுத்த 5 பந்துகளை சிக்ஸருக்கு அடித்து அமர்களப்படுத்தினார். இவர்களின் அதிரடியால் 10 ஓவர்களில் இந்திய அணி 150 ரன்கள் குவித்தது.

சூர்யகுமார் யாதவ்

சஞ்சு சாம்சன் 22 பந்துகளில் அரைசதம் விளாசிய அடுத்த 18 பந்துகளில் சதத்தை எட்டினார். டி20 போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசிய 2-வது இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அதோடு டி 20 கிரிக்கெட் இந்திய அணிக்காக சதம் விளாசிய முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

ஒருபுறம் சஞ்சு சாம்சன் ரன்குவிக்க, மறுமுனையில் தனது பாணியில் அதிரடிகாட்டிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவும் அரைசதம் விளாசினார். 13.4 ஓவர்களில் சஞ்சு சாம்சன் 111 ரன்களில்(8 சிக்ஸர், 11 பவுண்டரி) முஸ்தாபிசுர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்தனர். அவருக்குப் பின்னர் சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 75 ரன்களுடன்(5 சிக்ஸர், 8 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார்.

பாண்டியா – ரியான் விளாசல்

அவரைத் தொடர்ந்து ஹார்திக் பாண்டியா – ரியான் பராக் இருவரும் கைகோர்த்து அதிரடியைத் தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 300 ரன்களைத் தாண்டுவது போலத் தோன்றியது.

ஹார்திக் பாண்டியா

ஆனால், ஹார்திக் பாண்டியா 47 ரன்களும் (4 சிக்ஸர், 4 பவுண்டரி), ரியான் பராக் 34 ரன்களும்(4 சிக்ஸர், 1 பவுண்டரி) எடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.

இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தன்சீம் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு அணியின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் ஆகவும் இது பதிவானது. முதலிடத்தில் நேபாள அணி மங்கோலியாவுக்கு எதிரான 314/3 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்கள்

  • நேபாளம் 314/3 – மங்கோலியா 2023

  • இந்தியா 297/6 – வங்கதேசம் 2024*

  • செக் குடியரசு 278/4 – துருக்கி 2019

  • ஆப்கானிஸ்தான் 278/3 – அயர்லாந்து 2019

  • மலேசியா 268/4 – தாய்லாந்து 2023

அதன்பின்னர் 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே பர்வேஸ் ஹொசைன் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து தன்சித் 15 ரன்னிலும், கேப்டன் ஷாண்டோ 14 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அவருக்குப் பின்னர் லிட்டன் தாஸ் – தவ்ஹித் ஹிரிதோய் இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால், இலக்கை எட்ட முடியவில்லை.

அதிகபட்சமாக தவ்ஹித் ஹிரிதோய் 63* ரன்கள் எடுத்தார். லிட்டன் தாஸ் 42 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணித் தரப்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டும், மயங்க் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!