150 ஆண்டுகள் பழமையான நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையை மூடுவதா? – ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்ற பழமொழியை கருத்தில் கொண்டு, இயன்ற வரை நோய் இல்லா வாழ்வை மக்கள் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டுமென்றால், கூடுதலாக மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் உருவாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஓர் அரசு செயல்பட வேண்டும். ஆனால், இதற்கு முற்றிலும் முரணாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு, நீண்ட காலமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனையை முடக்கிய தி.மு.க. அரசு, இந்த ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த மருத்துவமனையை மூட முயற்சித்து வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்டம், நாகை நகரில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அன்றாடம் ஆயிரக்கணக்கான புறநோயாளிகளும், உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நாகையில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில், ஒரத்தூரில் துவங்கப்பட்டுள்ள புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாகை நகரில் இயங்கி வரும் பழைய மருத்துவமனையை கடந்த ஏப்ரல் மாதமே தி.மு.க. அரசு முழுவதுமாக மாற்றியதாகவும், இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து மகப்பேறு பிரிவு, குழந்தைகள் பிரிவு மற்றும் 24 மணி நேரமும் இயங்கும் அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவை நாகை நகரில் இயங்கும் பழைய மருத்துவமனையிலேயே செயல்படும் என்று அரசு அறிவித்ததாகவும், இருப்பினும், பழைய மருத்துவமனையில் மருத்துவர்களே இல்லாத நிலை ஏற்பட்டு, மருத்துவ மாணவர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டதாகவும், அவர்களும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் புதிய மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று நாகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு புதியதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துவக்கப்பட்டுவிட்டதற்கு என்பதற்காக, ஏற்கெனவே இயங்கி வந்த மருத்துவமனையை மூடுவது என்பது முறையற்ற செயல். நாகப்பட்டினம் மாவட்டம், ஒரத்தூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்பது மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் மருத்துவர்கள்முன் பயிற்சி பெறுவதற்கும் மற்றும் ஒரத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மக்கள் சென்று சிகிச்சை பெறுவதற்கும் உருவாக்கப்பட்டது. புதிதாக மருத்துவமனை கட்டப்பட்டுவிட்டது என்பதற்காக 150 ஆண்டு காலமாக இயங்கி வரும் பல்நோக்கு மருத்துவமனையை மூடுவது நியாயமற்ற செயல்.

தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, நாகை நகரில் உள்ள மக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, மருத்துவ சிகிச்சை பெறவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். திடீர் உடல் நலக் குறைவோ, மாரடைப்போ, விபத்தின் காரணமாக எலும்பு முறிவு, தலைக்காயம் ஆகியவை ஏற்பட்டாலோ, 15 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும்போது உயிருக்கே ஆபத்து ஏற்படும். இரண்டு மருத்துவமனைகளும் முழு வீச்சில் செயல்பட்டால்தான், நோய்களினாலும், விபத்துகளினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக சிகிச்சை பெற்று விரைவில் குணம் பெற வழிவகை ஏற்படும். சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசு மருத்துவமனையை மூடுவது என்ற தி.மு.க. அரசின் செயல்பாடு "அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம்" என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. மக்களின் உயிருடன் விளையாடும் தி.மு.க. அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

நாகை நகரில் வசிக்கும் மக்களின் துன்பங்களைப் புரிந்து கொண்டும், நேரத்தின் அருமையை கருத்தில் கொண்டும், நிதியைப் பற்றி யோசிக்காமல் மக்களின் உயிரை மட்டுமே கவனத்தில் கொண்டு, 150 ஆண்டு கால பழமைவாய்ந்த நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை நாகை நகரில் தொடர்ந்து முழுவீச்சில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related posts

10 பாசஞ்சர் ரயில்களில் அக்.1 முதல் படிப்படியாக 12 பெட்டிகளாக அதிகரித்து இயக்க முடிவு

ராகுலை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை: காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் குற்றச்சாட்டு

சென்ட்ரல் – ஆவடி மின்சார ரயில் சேவை மாற்றம்