2 ஆண்டுகளில் 86 டி20 விக்கெட்டுகள்..! வாழ்க்கையின் மந்திரம் குறித்து பேசிய அர்ஷ்தீப் சிங்!

25 வயதாகும் இளம் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20யில் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு டி20யில் அறிமுகமான அர்ஷ்தீப் சிங், 55 டி20 போட்டிகளில் 86 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். அதற்குள்ளாக 2 உலகக் கோப்பைகளில் விளையாடிவிட்டார்.

வங்கதேசத்துடன் முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2ஆவது போட்டியில் நாளை (அக்.9) அருண்ஜெட்லி மைதானத்தில் மோதுகின்றன.

1-0 என தொடரில் இந்திய அணி முன்னிலை வக்கிறது. டெஸ்ட்டில் 2-0 என வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

அர்ஷ்தீப் சிங் கூறியதாவது:

நான் எனது கிரிக்கெட்டை மகிழ்ச்சியாக விளையாடுகிறேன். கடந்த 2 ஆண்டுகள் எப்படி பறந்து சென்றதென தெரியவில்லை. நான் முடிந்தளவுக்கு நிகழ்காலத்தில் இருக்க முயற்சிக்கிறேன். எனது உயர்வு, தாழ்வுகளை நான் நேசிக்கிறேன். அதுதான் எனது நோக்கமாக இருக்கிறது.

எனது வாழ்க்கையின் மந்திரம் நிகழ்காலத்தைக் கொண்டாடுவதுதான். இன்று எனது ஓய்வு நேரம் என்பதால் அதை ரசித்து செய்கிறேன். நாளை குறித்து அது வரும்போது பார்த்துக்கொள்ளலாம்.

இதையும் படிக்க:சிபிஎல்: முதல்முறையாக கோப்பையை வென்ற அணி..! டு பிளெஸ்ஸி கூறியதென்ன?

அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றன. அதைப்பற்றி நான் பெரிதாக சிந்திக்கவில்லை.

எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அது எந்தவிதமான கிரிக்கெட்டாக இருந்தாலும் எனது சிறந்த செயல்பாடுகளை தரவேண்டுமென நினைக்கிறேன்.

டி20,டெஸ்ட், ஒருநாள் என எதுவாக இருந்தாலும் அந்த ஆடுகளத்தின் தன்மை, எல்லைக் கோடுகள், போட்டியின் தன்மைக்கு ஏற்றவாறு விரைவாக தகவமைக்க வேண்டுமென்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

இது வீரர்களது திறனை பரிசோதிக்க நல்லதொரு வாய்ப்பாகும். வித்தியாசமான ஃபார்மெட்டுகளில் விளையாடுவது ஒரு வீரருக்கு நிறைய கற்றுக்கொடுக்கும்.

சிவப்புநிற பந்தில் அதிகமான ஓவர்கள் வீச வேண்டியிருக்கும். அது நமக்கு பொறுமையினைக் கற்றுத்தரும். ஆனால், டி20யில் பொறுமை தேவையில்லை. ஒரு பேட்டர் என்ன செய்வாரென நாம் சிந்திக்க வேண்டும்.

இந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு அருண் ஜெட்லி மைதானத்தில் போட்டிகள் இல்லை. அதனால், நாளைக்கு வந்தபிறகுதான் மைதானம் எப்படியிருக்கிறதென கண்டறிந்து அதற்கேற்றார்போல் திட்டமிட வேண்டும். பயிற்சியாளரும் கேப்டனும் சோதனை செய்து எங்களுக்கு யோசனை அளிப்பார்கள் என்றார்.

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்