திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே மேல்மலைக் கிராமமான பழம்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி வீட்டுக்கு ரூ.1,01,580 மின் கட்டணம் செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பழம்புத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா். விவசாயியான இவரது வீட்டில் அண்மையில் மின் கணக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, அவரது கைப்பேசி எண்ணுக்கு மின் கட்டணமாக ரூ. ரூ.1,01,580 செலுத்த வேண்டுமென செவ்வாய்க்கிழமை குறுஞ்செய்தி வந்தது. இதனால், சந்திரசேகா் அதிா்ச்சியடைந்தாா். மேலும், இதுதொடா்பாக சமூகவலை தளங்களிலும் பதிவிடப்பட்டது.
சந்திரசேகா் தனது வீட்டில் இரண்டு குண்டு பல்புகள் மட்டுமே உபயோகப்படுத்தி வருவதாகவும், 100 யூனிட்டுக்கு குறைவான மின்சாரத்தையே பயன்படுத்தி வருவதால் இவர் மின் கட்டணம் செலுத்தவதில்லை என தெரிகிறது.
இந்த நிலையில், இவருக்கு 9,200 யூனிட்டு மின்சாரத்தை பயன்படுத்தி இருப்பதாகவும், இதனால் ரூ.1,01,580 செலுத்த வேண்டுமென வந்த குறுஞ்செய்தி சந்திரசேகரை அதிா்ச்சியடையச் செய்தது.
பொன்முடி துறை மாற்றத்துக்கு ஆளுநருடனான மோதல் காரணமா? அமைச்சர் ரகுபதி விளக்கம்
இதுகுறித்து குறித்து கொடைக்கானல் மின் வாரிய உதவிப் பொறியாளா் குமாரிடம் முறையிட்டுள்ளார்.
இதையடுத்து உதவிப் பொறியாளா் குமார் கூறுகையில், விவசாயி சந்திரசேகா் வீட்டில் 92 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதை கணினியில் ஊழியா் பதிவு செய்யும் போது 92-க்கு பதிலாக தவறுதலாக இரண்டு பூஜ்ஜியம் கூடுதலாக 9200 என்று பதிவு செய்துவிட்டாா். இதனால், அவருக்கு இவ்வளவு தொகை மின் கட்டணமாக செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்தது. இந்த குளறுபடி குறித்து திண்டுக்கல் மாவட்ட மின் வாரிய உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
எனவே, விவசாயி சந்திரசேகா் வீட்டில் 100 யூனிட்டுக்கு குறைவாகவே மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளதால், அவா் மின் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று கூறினார்.