அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 4 காசுகள் சரிந்து 84.09 காசுகளாக நிலைப்பெற்றது.
கடந்த இரு நாள்களாக அமெரிக்க டாலருக்கு நிகராக உயர்வுடன் இருந்த இந்திய ரூபாய் மதிப்பு இன்று சரிந்துள்ளது. கடந்த இரு நாள்களாக பங்குச் சந்தை வணிகமும் உயர்வுடன் இருந்தது.
பலவீனமான உள்நாட்டு சந்தைகள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கான டாலர் தேவை அதிகரிப்பு ஆகியவை இந்திய ரூபாய் மதிப்பு சரிவதற்கான காரணங்களாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வணிகத்தின் 3வது வணிக நாளான இன்று அக். 30) டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் குறைந்து, 84.09 ஆக உள்ளது.
வியாழக்கிழமையான நேற்று 2 காசுகள் உயர்ந்து 84.05 காசுகளாக இருந்தது. அக்டோபர் 11ஆம் தேதி அதிகபட்ச சரிவைச் சந்தித்த இந்திய ரூபாய் 84.10 காசுகளாக இருந்தது. இன்றைய சரிவு இதற்கு மிக அருகில் அமைந்துள்ளது.
பங்குச் சந்தை நிலவரம்
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 426.85 புள்ளிகள் சரிந்து 79,942.18 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இது மொத்த வணிகத்தில் 0.53% சரிவாகும்.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 126 புள்ளிகள் சரிந்து 24,340.85 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.51% சரிவாகும்.
நிஃப்டி பட்டியலில் வங்கி, ஆட்டோ, நிதித் துறை, ஐடி, மருத்துவத் துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகள் எதிர்மறையாக இருந்தன. மீடியா, மெட்டல், ரியாலிட்டி துறை பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.
இதையும் படிக்க | பங்குச் சந்தை சரிவுடன் முடிவு! வங்கி, நிதித் துறை பங்குகள் சரிவு!