20 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு: காங்கிரஸ்

ஹரியாணாவில் 20 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ஹரியாணா தேர்தலில் 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதற்கான ஆதாரத்தை தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் இன்று (அக். 9) சமர்ப்பித்தது.

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. காங்கிரஸ் கட்சி 37 இடங்களில் வெற்றி பெற்றது.

ஹரியாணா தேர்தல் முடிவுகள் கள நிலவரத்துக்கு எதிரானதாக உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் இன்று மனு ஒன்றை அளித்தனர்.

அதில், ஹரியாணாவில் 20 தொகுதிகளில் மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 7 தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டதற்கான ஆதாரத்தையும் உடன் சமர்ப்பித்தது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா பேசியதாவது,

''ஹரியாணா தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. கர்னல், தப்வாலி, ரேவாரி, பானிபட் (நகரம்), ஹூதால், கல்கா மற்றும் நார்னெளல் ஆகிய தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டிருந்ததற்கான ஆதாரத்தை வழங்கியுள்ளோம்.

இது தொடர்பான விசாரணை முடியும்வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சீலிட்டு பாதுகாப்பாக வைக்க வேண்டும். வெளிப்படைத் தன்மையுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்.

ஹரியாணாவில் கிடைத்துள்ளது அதிர்ச்சி அளிக்கும் முடிவு. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என அனைத்துத் தரப்பிலும் கூறப்பட்டது'' என பவன் கேரா குறிப்பிட்டார்.

Related posts

ஒடிசா: வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை-மகள் பாம்பு கடித்து பலி

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக