2026 சட்டப்பேரவை தேர்தலில் சென்னையின் 16 தொகுதியிலும் அதிமுக வெற்றிபெற வேண்டும்: நிர்வாகிகளுக்கு பழனிசாமி அறிவுறுத்தல்
சென்னை: 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னையில் உள்ள 16தொகுதிகளிலும் அதிமுகவெற்றிபெற வேண்டும் என்று நிர்வாகிகளை பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வியடைந்த நிலையில், மக்களவைத் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் பொதுச் செயலாளர் பழனிசாமி, 2-ம் கட்டமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதன்படி வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆகியோ ருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை பழனிசாமி வழங்கியுள்ளார். நிர்வாகிகள் அனைவரும் மாதந்தோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். அதிமுகஅரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இளைஞர்களை அதிகஅளவில் கட்சியில் சேர்த்து பலப்படுத்த வேண்டும். உள்ளூர் பிரச்சினைகளை கையிலெடுத்து போராட்டம் நடத்த வேண்டும்.
கடுமையாக உழைக்க வேண்டும்: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெற வேண்டும். அதற்கு அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப அணியை வலுப்படுத்தி, இணையங்களில் அதிமுகவுக்கு எதிராக பரப்பப்படும் கருத்துகளுக்கு, நாகரீகமான முறையில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.