2026-ல் கூட்டணி ஆட்சி நடக்கும்; அதில் பாமக இருக்கும்: அன்புமணி ராமதாஸ்

போதைப் பொருட்களை ஒழிக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பாமக மோதல் விவகாரத்தில், தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்களுக்கு ஆறுதல் கூற சென்ற பாமக நிர்வாகிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக காவல்துறை முதல்-அமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கும் சூழலில், இந்தச் சம்பவத்தில் முறையாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகட்டி வேடிக்கை பார்ப்பதுதான் திராவிட மாடலா?.

மோதலுக்கு காரணமானவர்களை விட்டு விட்டு, பாமக நிர்வாகிகள் மீது காவல்துறை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. காவல்துறை தன் கடமையை சரியாக செய்ய வேண்டும். இது இப்படியே சென்றால் பாமக வேடிக்கை பார்க்காது. மிகப் பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம்.

தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. காவல்துறையினர் ஒத்துழைப்புடன் தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. போதை பொருள் விவகாரத்தில் முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும். வெறும் கண்துடைப்புக்காக மட்டும் அல்லாமல் போதைப் பொருட்களை ஒழிக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

2026-ல் கூட்டணி ஆட்சி நடக்கும், அதில் பாமக இருக்கும்; கட்டாயம் ஆட்சி அதிகார பகிர்வு இருக்கும். 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. அந்த சூழலில் என்ன இருக்கிறதோ, யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குறித்து அப்பொழுது முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

முதல்வர் மருந்தகம் அமைக்க வாய்ப்பு: எவ்வாறு விண்ணப்பிப்பது? வெளியான அறிவிப்பு!

ஜெய்சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய ஆஸி., ஊடகத்திற்கு கனடா தடை: இந்தியா கண்டனம்

India raids offices of sellers using Amazon, Flipkart platforms, sources say