’24 ஆண்டுகள்.. தினமும் 10 சிகரெட்டுகள்’: புகைப்பழக்கத்தை நிறுத்திய நபருக்கு குவியும் பாராட்டு

'புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு' என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இருந்தாலும் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு பழக்கப்பட்டுப் போனவர்களால் உடனடியாக அதில் இருந்து மீள்வது என்பது கடினம். ஒரு சிலர் தீவிர நோய்த்தாக்கம் ஏற்பட்டபின், மருத்துவர்களின் அறிவுரைப்படி படிப்படியாக புகைப்பழக்கத்தை நிறுத்துவார்கள். சிலர் தாமாகவே உணர்ந்து புகைப்பழக்கத்தை நிறுத்துவதுண்டு. அப்படிப்பட்ட ஒருவர்தான் ரோகித் குல்கர்னி.

செயின் ஸ்மோக்கராக இருந்த குல்கர்னி, புகைப்பழகத்தை நிறுத்தியது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "நான் கடந்த 24 வருடங்களாக ஒரு நாளைக்கு 10 சிகரெட் பிடித்தேன். இதைக் கணக்கிட்டு மொத்தம் எவ்வளவு சிகரெட் பிடித்தேன்? என்ற விஷயத்திற்குள் போக விரும்பவில்லை; நினைத்தாலே பயமாக இருக்கிறது. இந்த வருடம் ஜென்மாஷ்டமி தினத்தன்று சிகரெட் புகைக்கும் பழக்கத்தை நிறுத்த முடிவு செய்து நிறுத்தினேன். சிகரெட்டைத் தொட்டு 17 நாட்கள் ஆகிறது. இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10-ம் தேதி எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. இதுவரை 9 லட்சத்து 79 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அதை பார்த்துள்ளனர். 19,000 பேர் லைக் செய்துள்ளனர்.

பலர் அவரது முடிவை பாராட்டி உள்ளனர். சிலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். சிலர் ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.

ரோகித் குல்கர்னிக்கு ஆலோசனை வழங்கியவர்களில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு புகைப்பழக்கத்தை நிறுத்திய ஓய்வுபெற் ராணுவ அதிகாரியும் ஒருவர்.. அவர் தனது பதிலில் "ரோஹித்… நான் 1982 முதல் 1996 வரை தினமும் சராசரியாக 15-18 சிகரெட்டுகள் புகைத்தேன். 1996-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி எனது சிகரெட் பாக்கெட்டை நசுக்கி எறிந்தேன். 29 வருடங்களாக நான் சிகரெட்டைத் தொடவில்லை. இனி சிகரெட் வேண்டாம் என்பதில் உறுதியாக இருங்கள். இரண்டு மாதங்களில் சிகரெட் பிடிக்கும் ஆசை மறந்துவிடும்" என கூறியிருக்கிறார்.

Related posts

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 64 வயது முதியவர் போக்சோவில் கைது

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்