3 மணி நேர மோசமான ஆட்டத்தை வைத்து அணியை மதிப்பிட முடியாது: ரோஹித் சர்மா

3 மணி நேர மோசமான ஆட்டத்தை வைத்து இந்திய அணியை மதிப்பிடுவது நியாயமாக இருக்காது என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இதையும் படிக்க: உடற்தகுதி சோதனையில் இரண்டு முறை தோல்வியடைந்தவரால் பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி!

3 மணி நேர மோசமான ஆட்டம்

இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 46 ரன்களில் ஆட்டமிழந்தது. ஆடுகளத்தை சரியாக கணிக்காமல் தவறான முடிவை எடுத்துவிட்டதாக ரோஹித் சர்மாவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், 3 மணி நேர மோசமான ஆட்டத்தை வைத்து இந்திய அணியை மதிப்பிடுவது நியாயமாக இருக்காது என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

️ This team is wanting to fight back, wanting to stay in the game as long as possible, and not give it easy to the opposition
Captain Rohit Sharma talks about #TeamIndia’s strong fightback in the Bengaluru Test.#INDvNZ | @IDFCFIRSTBank | @ImRo45pic.twitter.com/VJGCkwid3V

— BCCI (@BCCI) October 20, 2024

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இந்த டெஸ்ட் போட்டி குறித்து நான் அதிகம் கவலைப்பட போவதில்லை. ஏனென்றால், முதல் இன்னிங்ஸில் அந்த மூன்று மணி நேர மோசமான ஆட்டத்தை வைத்து இந்திய அணி எப்படிப்பட்ட அணி எனக் கூறுவது நியாயமாக இருக்காது. இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் நன்றாக சரிவிலிருந்து மீண்டு வந்தோம். முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றுவிட்டோம். ஆனால், இந்த போட்டியில் நிறைய நல்ல விஷயங்களும் நடந்திருக்கின்றன.

இதையும் படிக்க: டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!

இந்த போட்டியில் சில தவறுகளை நாங்கள் செய்தோம். அதன் விளைவாக போட்டியில் தோல்வியைத் தழுவினோம். ஆனால், இந்த தோல்வியோடு எல்லாம் முடிந்துவிடவில்லை. அதனால், இந்த டெஸ்ட் போட்டி குறித்து அதிகம் சிந்திக்காமல் இருக்க நாங்கள் முயற்சிப்போம். இந்த சூழலில் அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் இரண்டாவது போட்டியில் எப்படி வலுவாக மீண்டு வருவது என்பதில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என்றார்.

சர்ஃபராஸ் கானுக்கு பாராட்டு

கழுத்து வலியின் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் விளையாட முடியாத சூழல் உருவானது. இதனையடுத்து, அவருக்குப் பதிலாக சர்ஃபராஸ் கான் அணியில் சேர்க்கப்பட்டார். தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சர்ஃபராஸ் கான் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 150 ரன்கள் எடுத்தார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்க உதவிய சர்ஃபராஸ் கானுக்கு கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: பாகிஸ்தானில் விளையாடிவிட்டு அதே நாளில் இந்தியா சென்றுவிடுங்கள்; செவிசாய்க்குமா பிசிசிஐ?

சர்ஃபராஸ் கான் தொடர்பாக ரோஹித் சர்மா பேசியதாவது: ஒரு கட்டத்தில் போட்டியில் இந்திய அணி வலுவாக இருந்தது. 350 ரன்கள் பின் தங்கியிருந்தோம் என்ற உணர்வே அப்போது இல்லை. அதனை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஷுப்மன் கில் முதல் போட்டியில் விளையாட முடியாதது துரதிருஷ்டவசமானது. சர்ஃபராஸ் கான் அவருக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சதம் விளாசி அசத்தினார். அணிக்கு இது மிகவும் நேர்மறையான விஷயம் என்றார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24 ஆம் தேதி புணேவில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்