3-வது மாடியில் இருந்து தண்ணீர் தொட்டியில் குதித்து உயிர்பிழைத்த கேரள தொழிலாளி: குவைத் தீ விபத்தில் அதிர்ச்சி சம்பவம்

கேரளாவை சேர்ந்த தொழிலாளியான நளினாக்ஷன் உயிர் தப்பிய சம்பவம் பதற வைக்கும் நிலையில் இருக்கிறது.

காசர்கோடு,

குவைத்தில் நேற்று முன்தினம் நிகழ்ந்த பயங்கர தீ விபத்து ஏராளமானவர்களின் உயிரை காவு வாங்கியிருந்தது. அதேநேரம் இந்த சம்பவத்தின்போது பலர் காயங்களுடன் உயிரை தற்காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.இதில் கேரளாவை சேர்ந்த தொழிலாளியான நளினாக்ஷன் உயிர் தப்பிய சம்பவம் பதற வைக்கும் நிலையில் இருக்கிறது. தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி கட்டிடத்தின் 3-வது மாடியில் தங்கியிருந்த இவர், சம்பவத்தின்போது தப்பிக்க வழி தெரியாமல் அங்கும் இங்கும் ஓடினார். கட்டிடத்தில் இருந்து குதிப்பதை தவிர அவருக்கு வேறு வழி இல்லை. ஆனால் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தால் உயிர் போய்விடும் நிலை. எனவே என்ன செய்வதென்று யோசிக்கவும் நேரமில்லாமல் தவித்த அவருடைய கண்ணில் கீழே ஒரு தண்ணீர் தொட்டி இருப்பது தெரிந்தது. உடனே வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல் அந்த தண்ணீர் தொட்டியில் குதித்தார்.

இதில் அவரது விலா எலும்பு உடைந்தது. மேலும் உடலின் பல பகுதிகளிலும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. இதனால் அவரால் அசைய முடியாமல் அங்கேயே கிடந்தார்.அவரது உறவினர்கள் சிலர் விபத்து நடந்த பகுதிக்கு அருகே தங்கியிருந்தனர். தீ விபத்து குறித்து அறிந்தவுடன் அங்கே விரைந்து வந்த அவர்கள் நளினாக்ஷனை தேடினர். அப்போது அவர் தண்ணீர் தொட்டியில் காயங்களுடன் கிடந்ததை அவர்கள் கண்டனர்.உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடாகி வருகிறது.

சம்பவத்தின் போது காயமடைந்தாலும் உயிர் தப்பியதால்நளினாக்ஷனின் குடும்பத்தினரும், உறவினர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

Related posts

முக்கிய வழக்குகளை மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை: இலங்கை புதிய அரசு உத்தரவு

லெபனானை முழு பலத்துடன் ஆதரிப்போம் – ஈரான்

ஈராக்கில் இருந்து இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல்