30 – 40 நிமிடங்கள் போதும்.. சொன்னதை செய்து காட்டிய அமெரிக்கா கேப்டன்…வெற்றிக்கு பின் கூறியது என்ன?

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

நியூயார்க்,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அமெரிக்க அணியின் கேப்டன் மோனங்க் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 159 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 44 ரன்கள் அடித்தார்.

பின்னர் 160 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய அமெரிக்காவும் 20 ஓவர்களில் 159 ரன்கள் அடித்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் மோனங்க் படேல் அரைசதம் அடித்தார். இதனையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி பெற்று அசத்தியது.

இப்போட்டிக்கு முன் முதல் 30 – 40 நிமிடங்கள் நாங்கள் நன்றாக விளையாடினாலே பாகிஸ்தானை வீழ்த்துவோம் என்று அமெரிக்க கேப்டன் மோனங்க் படேல் தெரிவித்தார். கடைசியில் அவர் சொன்னது போலவே பவர் பிளேவில் 3 விக்கெட்டுகளை எடுத்து ஆரம்பத்திலேயே பாகிஸ்தானை அடக்கியது அமெரிக்காவின் வெற்றிக்கு முக்கிய காரணமானது.

இது பற்றி போட்டியின் முடிவில் அமெரிக்க கேப்டன் பேசியது பின்வருமாறு:- "டாஸ் வென்று முதல் 6 ஓவர்களில் நாங்கள் பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்து அவர்களை அமைதியாக வைத்திருந்த விதம் நன்றாக இருந்தது. அவர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பின் ரிஸ்க் எடுத்து விளையாடுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அதே சமயம் 160 ரன்களை எங்களால் சேசிங் செய்ய முடியும் என்பதும் தெரியும். அதற்கு ஒரு பார்ட்னர்ஷிப் மட்டுமே தேவை. உலகக்கோப்பையில் விளையாடும் இந்த வாய்ப்பு ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு கிடைக்காது. எனவே நாங்கள் ஒவ்வொரு பந்திலும் எங்களை ஈடுபடுத்திக் கொண்டு வெற்றிக்காக போராடுகிறோம்" என்று கூறினார்.

Related posts

இந்தியா-நியூசிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

புரோ கபடி லீக்: பாட்னா பைரேட்ஸ், யு மும்பா அணிகள் வெற்றி

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து