385-வது சென்னை தினம் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து
சென்னை: சென்னை மாநகர மக்கள் சார்பில்385-வது சென்னை தினம் நேற்றுகொண்டாடப்பட்டது. இத்தினத்தை யொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மெட்ராஸ் நகரம் 1639-ம் ஆண்டு ஆக.22-ம் தேதி உருவானது. இது சிங்கார சென்னையாக வளர்ந்து இன்றுபிரம்மாண்ட பரிமாணத்தில் பல பகுதிகளை சார்ந்த மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டி, எல்லோருடைய மனதிலும் ஒரு உணர்வுபூர்வமான இடத்தைபிடித்திருக்கிறது.
சென்னை உருவான ஆக.22-ம்தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை தினத்தைமுன்னிட்டு பல்வேறு அமைப்புகள், ஓவியப் போட்டி, புகைப்பட போட்டி உள்ளிட்டவற்றை நடத்தி பரிசளித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அரசு சார்பில் எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் சென்னையின் பழமையை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி கடந்த 20-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
வரும் 29-ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில் இளம் தலைமுறை மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்து சென்று வருகின்றனர். 385-வது சென்னை தினமான நேற்று ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: மெட்ராஸ் தினத்தில் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள். ஆன்மிக பாரம்பரியம், செழிப்பான கலாச்சாரம் ஆகியவை நவீன கண்டுபிடிப்புகளுடனும், தொழில்முனைவு உணர்வுடனும் தடங்கலின்றி முன்னேறும் வளத்துக்கு சென்னை ஓர் எடுத்துக்காட்டு. சென்னையின் பாரம்பரியம், வளர்ச்சியின் தனித்துவமான இணைப்பைத் தழுவி அதன் சிறப்பான மற்றும் மாற்றத்தைக் கொண்ட புதுமை உணர்வோடு முன்னேறுவோம்.
முதல்வர் ஸ்டாலின்: சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது. வாழ்வு தேடி வந்தபலருக்கும் வசந்தத்தை வழங்கிட, வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை. இந்த தருமமிகு சென்னையே நமது சமத்துவபுரம். பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய, எழுதும் நம் சென்னையைக் கொண்டாடுவோம்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: வேலைவாய்ப்பு, மருத்துவம், உயர் கல்வி, தகவல் தொழில்நுட்பம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றின் இருப்பிடமாக விளங்குகின்றது ‘நம்ம சென்னை’. இன்று தனது 385-வது ஆண்டைக் கொண்டாடும் இந்த வேளையில் அனைவருக்கும் எனது ‘சென்னை தின’ நல்வாழ்த் துகள்.
மேயர் ஆர்.பிரியா: தனக்குள் பலகோடிக்கணக்கான மக்களை வைத்துஎறும்புபோல சுறுசுறுப்பாய் செயல்பட்டுவரும் சென்னை, சாதி, மத வேறுபாடு என எதுவும் இன்றி உழைக்கும் வர்க்கத்துக்கு சொந்தமானது. ஆண்டாண்டு காலமாக வாழ்வு தேடி வருபவர்களுக்கு எல்லாம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்து வாழ்வளிக்கும் சென்னைக்கு, 385-வது சென்னை தின வாழ்த்துகள்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: வந்தோரை எல்லாம் வாழவைக்கும் உயரிய நகரம். கடந்த 385 ஆண்டுகளில், பல வரலாறுகளைசுமந்து பயணித்துக் கொண்டிருக்கிறது நமது சென்னை. மேலும் பலநூற்றாண்டுகள் தனது தனிச்சிறப் போடு வளர்ச்சி பெறவும், புதிய வரலாற்றை உருவாக்கவும் அனைவருக்கும் இனிய சென்னை தின வாழ்த்து.
பாமக தலைவர் அன்புமணி: சென்னை மண் பாட்டாளிகளின் மண்.பூர்வகுடி மக்களின் மண். வளர்ச்சிய டைந்த மாநகரமாக மாற்றியுள்ள நாம், இந்தியாவின் முதன்மை நகரமாக மாற்ற வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க உறுதியேற்போம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: சென்னை எனும் மாநகரம் உருவான தினத்தை கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது சென்னை தின நல்வாழ்த்து.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: கனவுகள் சுமந்த மனிதர்களின் கவலைகள் தீர்த்த பெருநகரம். தாயாகத் திகழும் கலைநகரம். குப்பைமேடுகள், பட்டப்பகலில் படுகொலைகள் இவை தான் இன்று சென்னையின் அடையா ளங்கள் என்றாகிப்போனது. மாறுவோம், மாற்றுவோம், தலைநகர் சென்னையை மீட்போம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.