இந்திய விமானங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதால் இண்டர்போல் உதவியை இந்தியா நாடியுள்ளது.
இந்தியாவில் விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதன்படி, கடந்த 2 வாரங்களில் 410க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கும் தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதனால், அடிக்கடி விமானங்கள் சோதனையிடப்படுவதால் மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பும் ஏற்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க: ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமற்றது: மல்லிகார்ஜுன கார்கே!
இந்த நிலையில், இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுப்பவர்களைப் பற்றி அறிய இந்திய அரசு சர்வதேச குற்ற விசாரணை அமைப்பான இண்டர்போலின் உதவியை நாடியுள்ளது.
மேலும், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்களை விடுபவர்களின் தொலைப்பேசி எண் மற்றும் இமெயில் கணக்கை திரட்டி தருமாறு அமெரிக்காவின் எப்பிஐ (FBI) விசாரணை அமைப்பிடம் இந்திய அரசு உதவி கேட்டுள்ளதாம். இதற்கு, எப்பிஐ சம்மதம் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.