46 நாட்களில் 41 அதிகாரிகளை இடமாற்றம் செய்வதால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை: ஆர்.பி.உதயகுமார்
மதுரை: “46 நாட்களில் 41 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதால் சட்டம் – ஒழுங்கில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை’’ என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் குற்றச்சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயத்துக்கு எதிராக போலீஸார் நடவடிக்கை எடுப்பதில் காட்டிய அலட்சியதுக்கு அரசுதான் காரணம். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் உரிய வழிகாட்டுதலை வழங்கினால் தான் அதை செயல்படுத்தும் காவல்துறை முழுமையாக ஈடுபட முடியும். சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டுக்கு அரசு பொறுப்பு ஏற்கவில்லை என்று சொன்னால் யார் பொறுப்பு ஏற்கமுடியும்.
நேற்று கூட காவல் துறையில் பணிபுரிந்த 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யபட்டனர். இந்த 46 நாட்களிலே 41 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்திருக்கிறார்கள். அதிகாரத்தை வைத்து பணியிட மாற்றம் செய்வது ஒன்றும் பெரிய சாதனையாக பார்க்கவில்லை. அதிகாரிகள் இடமாற்றம் செய்வதால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.
அதிகாரத்தை மக்கள் உங்கள் கையிலே கொடுத்திருப்பது பணியிட மாற்றம் செய்வதற்கு மட்டுமல்ல. 8 கோடி ஏழை, எளிய, சாமானிய தமிழர்களையும் நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் உங்களுக்கு முழு பொறுப்பு. ஆனால் அமைச்சரோ அரசு பொறுப்பு ஏற்காது என்று பேசுகிறார். எதன் அடிப்படையில் பேசுகிறார் எனத் தெரியவில்லை. அதனால்தான் ரவுடிகள், கூலிப்படைகள் இன்றைக்கு சர்வ சாதாரணமாக கொலை சம்பவங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன.
அதிர்ச்சியில் மக்கள் உறைந்து போய் இருக்கிறார்கள். மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கு தவறிய ஆட்சி மாற்றம் தான் மக்கள் எதிர்பார்க்கிறார்களே தவிர, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. ஆகவே இயலாமையின் அடையாளமாக இருக்கிற திமுக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.” என்று அவர் கூறினார்.