50 ஆண்டுகளை கடந்து ‘அவசரநிலை’ தவறுகள் குறித்து விவாதிப்பதில் என்ன பயன்? – ப சிதம்பரம் கேள்வி

50 ஆண்டுகளை கடந்து ‘அவசரநிலை’ தவறுகள் குறித்து விவாதிப்பதில் என்ன பயன்? – ப சிதம்பரம் கேள்வி50 ஆண்டுகளுக்குப் பிறகு அவசரநிலையின் உரிமைகள் மற்றும் தவறுகள் குறித்து விவாதிப்பதில் என்ன பயன் என்று கேள்வி எழுப்பியதுடன்…ப. சிதம்பரம் (கோப்புப் படம்)

புதுதில்லி: ‘அவசரநிலை தவறை’ அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பிரச்னையை எழுப்பியதற்காக பாஜகவை சாடிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், 50 ஆண்டுகளுக்குப் பிறகு அவசரநிலையின் உரிமைகள் மற்றும் தவறுகள் குறித்து விவாதிப்பதில் என்ன பயன் என்று கேள்வி எழுப்பியதுடன், அதே நேரத்தில் ‘கடந்த காலங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மக்களவை கூட்டத்தில், ‘1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி இந்திய வரலாற்றில் ஒரு கறுப்பு அத்தியாயமாகக் கருதப்படுகிறது. இதே நாளில் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலையை அமல்படுத்தி பாபாசாகேப் அம்பேத்காா் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தின் மீது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. அப்படி அமல்படுத்திய அந்த முடிவை இந்த அவை கடுமையாக கண்டிக்கிறது.

அவசர நிலையை எதிா்த்து, போராடி, நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றிய அனைவரின் உறுதியையும் இந்த அவை பாராட்டுகிறது என்ற தீர்மானத்தை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வாசித்தார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினா்கள் எழுந்து நின்று எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதனைத் தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரநிலை என்பது ஒரு தவறு என்றும், அவசரநிலையின் 50 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 25-ஆம் தேதி'சம்விதான் ஹத்யா திவாஸ்'என்ற பெயரில் அரசியலமைப்பு படுகொலை நாளாக அனுசரிக்கப்படும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தற்போது நாட்டில் உள்ளவர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் 1975-க்குப் பிறகு பிறந்தவர்கள். அவசரநிலை ஒரு தவறு, இதனை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியே ஒப்புக்கொண்டுள்ளார். இப்போது இதே போல் ஒரு அவசரநிலையை அவ்வளவு எளிதில் திணிக்க முடியாத வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு அவசரநிலையின் உரிமைகள் மற்றும் தவறுகள் குறித்து விவாதிப்பதில் என்ன பயன் என்றும், அதே நேரத்தில் 'கடந்த காலங்களில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ள சிதம்பரம், "பாஜக ஏன் 18 அல்லது 17 ஆம் நூற்றாண்டுக்கு திரும்பிச் செல்லவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெள்ளிக்கிழமை 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "கடந்த 10 ஆண்டுகளில், மோடி தலைமையிலான பாஜக அரசு ஒவ்வொரு நாளும் "அரசியலமைப்பு படுகொலை நாளை" அனுசரித்து வருகிறது. ஒவ்வொரு நிமிடமும் நாட்டில் உள்ள

ஒவ்வொரு ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினரின் சுயமரியாதையை நீங்கள் பறித்துவிட்டீர்கள்."

புனிதத்துவமான அரசியலமைப்பு என்ற சொல்லுடன் படுகொலை என்ற வார்த்தையை இணைத்துள்ளதன் மூலம், பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் அம்பேத்கரை அவமதிக்கின்றன எனப் பதிவிட்டிருந்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குணால் கோஷ், "அவசரநிலை தவறுக்காக இந்திரா காந்தி விமர்சிக்கப்பட்டார். இந்திரா காந்தி ஒருமுறை தோல்வியடைந்து மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அதனால் அந்த அத்தியாயம் வரலாற்றின் ஒரு பக்கம் மட்டுமே. பல ஆண்டுகளுக்குப் பிறகு, பாஜக தனது மக்கள் விரோதக் கொள்கை, பேரழிவுகள் மற்றும் பேரழிவுகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப முயல்கிறது," என்று கோஷ் கூறினார்.

Related posts

மும்பை: பாலியல் பலாத்கார குற்றவாளி போலீசாருடனான துப்பாக்கி சூட்டில் பலி

பலாத்காரத்திற்கு ஆளான மகளை 2 மகன்களுடன் சேர்ந்து பெற்ற தாயே தீர்த்து கட்டிய கொடூரம்

ஜம்மு காஷ்மீர் தேர்தல் – வாக்குறுதிகளை அறிவித்த ராகுல் காந்தி