ஈரோடு: தீபாவளி மறுநாளான வெள்ளிக்கிழமை அனைத்து துணிவகைகளும் 50 சதவீத தள்ளுபடியில் விற்கப்படுவதால் ஈரோடு கடை வீதியில் அதிகாலையிலேயே மக்கள் குவிந்தனர்.
தீபாவளி விற்பனைக்காக ஈரோட்டில் உள்ள அனைத்து ஜவுளி கடைகளிலும் புதுப்புது விதமான ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்து விற்பனை செய்தனர்.
இந்த நிலையில் தீபாவளிக்கு விற்பனையாகாத துணி வகைகளை ஸ்டாக் க்ளிரன்ஸ் செய்வதற்காக தீபாவளி மறுநாள் அனைத்து ஜவுளிக்கடைகளிலும் அனைத்து வகை துணிகளும் 50 சதவீதம் தள்ளுபடி செய்து விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
இதனைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை(நவ.1) அதிகாலையில் ஆர்கேவி சாலையில் உள்ள துணிக்கடைகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அதிகாலை 4 மணி முதல் ஜவுளி ரகங்களை வாங்க குவிந்துள்ளனர்.
இதையும் படிக்க |பட்டாசு விபத்துகளால் 304 பேர் பாதிப்பு: தீயணைப்புத் துறை
அதிகாலை 4 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இந்த தள்ளுபடி என்பதால் ஈரோடு , கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் 50 சதவீத தள்ளுபடியுடன் கூடிய புதிய துணிகளை வாங்க குவிந்ததை அடுத்து அதிகாலை 3 மணிக்கே கடைகள் திறக்கப்பட்டதை அடுத்து முண்டியடித்துக் கொண்டு துணிகளை வாங்கிச் செல்கின்றனர்.
புதிய துணிகள் தள்ளுபடியுடன் விற்பனை என்பதால் குறைந்த விலையில் அதிகளவு துணி வகைகளை எடுக்க முடியும் என்பதால் அதிகாலையில் வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.