7-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு; 200-க்கும் மேற்பட்ட பேரணிகள், பொதுக்கூட்டங்களை நடத்தி முடித்த பிரதமர் மோடி

புதுடெல்லி,

நாட்டில் மக்களவை தேர்தலுக்கான தேதி உள்ளிட்ட விவரங்களை கடந்த மார்ச் 16-ந்தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட தொடங்கின. இதுவரை 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

7-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று நிறைவடைந்து உள்ளது. இந்நிலையில் தேர்தல் தொடக்கத்தில் இருந்து, பா.ஜ.க.வுக்காக பிரதமர் மோடி பல்வேறு பேரணிகள், வாகன பேரணிகள், பொது கூட்டங்கள் ஆகியவற்றை நடத்தி, வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

இதன்படி, பேரணிகள், வாகன பேரணிகள், பொது கூட்டங்கள் என மொத்தம் 206 நிகழ்ச்சிகளை பொதுமக்களிடம் அவர் நடத்தியுள்ளார். 2019-ம் ஆண்டில் 145 பொது கூட்டங்களை நடத்திய பிரதமர் மோடி இந்த முறை அதனை மிஞ்சியுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது, பிரசார காலம் 68 நாட்களாக இருந்தது. இந்த முறை 76 நாட்களாக உள்ளது.

எனினும் தேர்தல் அறிவித்தபோது, மார்ச் 15 முதல் 17 வரையிலான 3 நாட்களில் பிரதமர் மோடி, 5 மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்திய பகுதிகளில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார்.

2019-ம் ஆண்டு தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஓரிடத்தில் கூட பா.ஜ.க. வெற்றி பெறவில்லை. அதனால் இந்த முறை, தொகுதிகளை கைப்பற்றவும், கர்நாடகாவில் தொகுதிகளை தக்க வைக்கவும், தெலுங்கானாவில் தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்கவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது.

73 வயதில், மற்ற எந்த தலைவரையும் விட இந்த அளவுக்கு அதிக பேரணிகளை நடத்திய தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். அதனுடன், அதிக தொலைவை பயணித்தவர் என்பதுடன் நில்லாமல், கட்சிக்கு வாக்குகளை அள்ளி வரும் மிக பெரிய வாக்கு சேகரிப்பவராகவும் தொடர்ந்து நீடித்து வருகிறார்.

மொத்தம் 80 நேர்காணல்களில் அவர் பங்கேற்றிருக்கிறார். இது, தேர்தல் தொடங்கியதில் இருந்து சராசரியாக நாளொன்றுக்கு ஒரு நேர்காணல் என்ற எண்ணிக்கைக்கும் கூடுதலாகும். எனினும், பிரசாரத்தற்கான வெற்றி, ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவு வெளிவந்த பின்னரே தெரிய வரும்.

பிரதமர் மோடி இன்று மாலை முதல் ஜூன் 1-ந்தேதி வரை கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபடுகிறார்.

Related posts

கோடியக்கரை அருகே கடலில் தவறி விழுந்த தரங்கம்பாடி மீனவர் மாயம்

“நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதா?” – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம் 

நடிகர் விஜய்யை அதிமுகவினர் யாரும் விமர்சிக்க வேண்டாம்: நிர்வாகிகளுக்கு பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல்