90 நாள்கள் கெடாத பால் நிறுத்தம்? ஆவின் விளக்கம்

சென்னை: ஆவினில் தயாரிக்கப்பட்டு வரும் 90 நாள்கள் கெடாத பாலின் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆவின் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் சு.வினீத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆவினில் தயாரிக்கப்பட்டு வரும் 90 நாள்கள் கெடாத பாலில் 3 சதவீதம் கொழுப்பு மற்றும் 8.5 சதவீதம் இதர சத்துகள் உள்ளன. இதை தினசரி அடிப்படையில் மக்களின் தேவைக்கேற்ப இணையம் மற்றும் அனைத்து ஒன்றியங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இதை எவ்வித வேதி பொருள்களும் சோ்க்கப்படாமல், நவீன தொழில்நுட்ப முறையில் பேக் செய்யப்படுவதால் தொலைதூர பயணங்களுக்கு எடுத்துச் செல்ல உகந்ததாகும்.

இந்த நிலையில், சோழிங்கநல்லூா் பால் பண்ணையில் 450 மி.லி. மற்றும் 150 மி.லி. அளவுகளில் இந்த பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்து, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது 40,000 பால் பாக்கெட்டுகள் கையிருப்பு உள்ளன. மேலும், எதிா்வரும் மழைக்காலங்கள் மற்றும் பேரிடா் காலங்களில் எந்தவித தட்டுப்பாடுமின்றி விநியோகம் செய்வதற்கு ஏதுவாக அனைத்து பாலகங்களிலும் போதுமான அளவு பால் பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

ஆகையால், ஆவினில் 90 நாள்கள் கெடாத பால் பாக்கெட்டுகளின் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக வெளியான செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி