ஜெய்சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய ஆஸி., ஊடகத்திற்கு கனடா தடை: இந்தியா கண்டனம்

புதுடில்லி: ஆஸி.,யில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டியை ஒளிபரப்பு செய்த ஊடகத்திற்கு கனடா அரசு தடை விதித்துள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு தொடர்பான விவகாரத்தில், வட அமெரிக்க நாடான கனடா மற்றும் நம் நாட்டுக்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் உள்ள ஹிந்து கோவிலில், பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு, நம் வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், பிரதமர் நரேந்திர மோடியும், ‘இந்த விவகாரத்தில், கனடாவிடம் இருந்து நியாயத்தை எதிர்பார்க்கிறோம்’ என்று கூறியிருந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் உடன் இணைந்து நிருபர்களை சந்தித்தார். அப்போது ஜெய்சங்கர் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து கூறியதாவது: கனடாவுடான உறவில் மூன்று முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன.

முதலில், எவ்வித ஆதாரங்களும் அளிக்காமல் இந்தியா மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறியது. அடுத்தது, அங்குள்ள இந்திய துாதரக அதிகாரிகள் கண்காணிக்கப்படுவது ஏற்புடையதல்ல. தற்போது கோவிலில் நடத்தப்பட்ட தாக்குதலும் முக்கிய பிரச்னையாக உள்ளது. இதிலிருந்து, பயங்கரவாதத்தில் ஈடுபட்ட பிரிவினைவாத அமைப்புக்கு அங்கு அரசியல் ரீதியில் ஆதரவு அளிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியை ஒளிபரப்பு செய்ததற்காக இந்த ஊடகத்தின் சமூக வலைதள பக்கத்திற்கு கனடா அரசு தடை விதித்து உள்ளது.

இது தொடர்பாக டில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: குறிப்பிட்ட ஊடகத்தின் சமூக வலைதள பக்கத்திற்கு கனடா அரசு தடை விதித்து உள்ளது. ஜெய்சங்கர் பேட்டி அளித்த சில மணி நேரத்தில் இது நடந்துள்ளது.

இது எங்களுக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. விசித்திரமாக உள்ளது. பேச்சுசுதந்திரம் குறித்து கனடா போடும் நாடகத்தை இது எடுத்துகாட்டுகிறது. அந்த கூட்டத்தில், எந்தவித ஆதாரங்கள் இல்லாமல் கனடா குற்றம்சாட்டுவதையும், இந்திய தூதரக அதிகாரிகளை கனடா கண்காணிப்பதையும், இந்தியாவிற்கு எதிரான அமைப்புகளுக்கு அந்நாடு அளித்துள்ள அரசியல் அடைக்கலத்தையும் எடுத்துக்கூறினார்.

இதன் மூலம் ஆஸி.,ஊடகத்திற்கு கனடா அரசு தடை விதித்ததற்கான காரணத்தை அனைவரும் புரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

முதல்வர் மருந்தகம் அமைக்க வாய்ப்பு: எவ்வாறு விண்ணப்பிப்பது? வெளியான அறிவிப்பு!

India raids offices of sellers using Amazon, Flipkart platforms, sources say

India Calls Out Canada’s Move Against Australian Outlet That Interviewed S Jaishankar