அதிவேக 8 வழிச்சாலையாகிறது சென்னை – திருச்சி நெடுஞ்சாலை

விக்கிரவாண்டி:தமிழகத்தில் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக உள்ள சென்னை – திருச்சி சாலை, தற்போது நான்குவழிச் சாலையாக உள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்தால், சாதாரண நாட்களிலேயே இச்சாலையில் கடும் நெரிசல் நிலவி வருகிறது.

இச்சாலையில் நெரிசல், விபத்து, உயிரிழப்புகளை தவிர்க்கவும், பயண நேரத்தை குறைக்கவும், தற்போதுள்ள நான்குவழி சாலையை, கிரீன் பீல்டு எக்ஸ்பிரஸ் வே எனப்படும் எட்டு வழி அதிவிரைவு சாலையாக மாற்ற, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமான நகாய் திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக சென்னை – திருச்சி இடையே 310 கி.மீ., துார பயண நேரம், 6 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக குறையும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த எட்டு வழிச்சாலை, சென்னை அடுத்த சிங்கபெருமாள் கோவிலில் இருந்து துவங்கும். அதற்கான பூர்வாங்க பணியாக, சாலை வளைவுகள், அதிக விபத்து ஏற்படும் பகுதிகள், கூடுதல் மேம்பாலங்கள், சாலைகள் அமைக்க நிலம் எடுப்பு போன்ற விபரங்களை சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள சாலை விரிவாக்க பணிகள் முடிந்த பின், இத்திட்டத்தை துவங்க விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து நகாய் அதிகாரிகள் அனுப்ப உள்ளனர்.

தமிழகத்தில் சென்னை – சேலம் அதி விரைவு சாலைக்கு அடுத்ததாக, சென்னை – திருச்சி அதிவிரைவு சாலை திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்றும், 2025ம் ஆண்டு மத்தியில் பணிகள் துவங்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

இந்த வாரம் கலாரசிகன் – 20-10-2024

புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் கோயிலில் நவ.28-இல் குடமுழுக்கு!

சொல்லப் போனால்… மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!