சென்னை : தனியாரிடம் மின்சாரம் வாங்குவதை குறைக்கும் வகையில், செங்கல்பட்டு, திருவாரூர் உட்பட ஆறு மாவட்டங்களில், சூரியசக்தி மின்சார பூங்கா அமைக்கும் பணிகளை துவக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், ஆண் டுக்கு 300 நாட்களுக்கும் மேலாக சூரியசக்தி மின்சாரம் கிடைக்கும் சாதகமான சூழல் நிலவுவதால், தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.
இதுவரை, 8,180 மெகாவாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 1 மெகா வாட் கூட, மின் வாரியத்திற்கு சொந்தம் கிடையாது.
மாநகராட்சி, நகராட்சி பகுதிகள் தவிர்த்து, மாவட்டந்தோறும் தலா, 50 – 100 மெகாவாட் என, ஒட்டு மொத்தமாக, 4,000 மெகா வாட் திறனில் சூரியசக்தி மின்சார பூங்கா அமைக்க, 2021 – 22ல் மின் வாரியம் திட்டமிட்டது. இதற்காக, மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
திருவாரூர், கரூர், நாகை, சேலம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், 3,300 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டது. முதல் பூங்காவாக திருவாரூரில், 50 மெகா வாட் திறனில் சூரியசக்தி மின்சார நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதுபோன்ற புதுப்பிக்கத்தக்க மின்சார பணிகளை மேற்கொள்ளும் பணிக்காக, தமிழக பசுமை எரிசக்தி கழகம் என்ற புதிய நிறுவனம் இந்தாண்டு ஆரம்பத்தில் துவக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, ஆறு மாவட்டங்களிலும், சூரியசக்தி மின்சார பூங்கா அமைக்கும் பணியை விரைவில் துவக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.