TNUHDB | புதிய குடியிருப்பு வீடுகள் கட்ட மக்கள் எதிர்ப்பு விவகாரம் – பேச்சுவார்த்தையில் உடன்பாடு

TNUHDB | புதிய குடியிருப்பு வீடுகள் கட்ட மக்கள் எதிர்ப்பு விவகாரம் – பேச்சுவார்த்தையில் உடன்பாடு

மேலக்கோட்டையூர்: வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிய குடியிருப்பு வீடுகள் கட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அம்மக்களிடம் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்படுத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக புதிதாக 600-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட உள்ளது. இதற்காக அரசு தரிசு புறம்போக்கு வகைப்பாட்டில் 15 ஏக்கர் நிலம் கடந்த 2021-ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த 28-ம் தேதி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த இடத்தை அளவீடு செய்தனர். இதற்கு மேலக்கோட்டையூர் காவலர் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ராஜீவ்காந்தி நகர் குடியிருப்புவாசிகள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த இடத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டக்கூடாது என்றும், தங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட வேண்டும் என்றும், அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்றும் அப்போது அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அப்போது அளவீடு செய்யும் பணி ஒத்தி வைக்கப்பட்டு இன்று (அக்.1) பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். வண்டலூர் வட்டாட்சியர் புஷ்பலதா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் குமரேசன், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மேலக்கோட்டையூர் ஊராட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த பொது மக்களை அழைத்தனர்.

ஆனால், அனைவரின் முன்னிலையில் திறந்த வெளியில் தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கூறி அங்கு வர மறுத்தனர். இதையடுத்து அதிகாரிகள் அனைவரும் பொதுமக்கள் போராட்டம் நடத்திய இடத்துக்கு வந்தனர். அங்கு பேசிய பொதுமக்கள், “ஏற்கெனவே காவலர் குடியிருப்பில் குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி மற்றும் முறையான கழிவுநீர் பாதை இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம்.

இந்நிலையில் மேலும் கூடுதலாக அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் அமைந்தால் மேலும் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர். மேலும், ராஜீவ்காந்தி நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்கக்கூடாது, அவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்” என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதையடுத்து அவர்களிடம் பேசிய அதிகாரிகள், “முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் திட்டத்தை நிறைவேற்ற திட்டம் தயாரிக்கப்பட்டது. தற்போது 6 ஏக்கர் பரப்பளவில் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதனால் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படும் என பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” என்றனர்.

மேலும், அனைவருக்கும் வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்படும், ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாயக்கூடம் போன்றவை அமைத்துத் தரப்படும் என்றும் உறுதியளித்த அதிகாரிகள், எனவே அரசின் திட்டத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினர். அதிகாரிகள் வாக்குறுதி அளித்தபடி பட்டா வழங்கினால் திட்டத்தை செயல்படுத்த எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறி பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

Related posts

32 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர்

நேபாளம்: மலையேற்றத்தின்போது மாயமான ரஷிய வீரர்கள் 5 பேர் சடலமாக மீட்பு

“என்ன நடவடிக்கை எடுத்தாலும் கவலை இல்லை..” – தளவாய் சுந்தரம்