கிராம நத்தம் நிலங்கள் யாருக்கு சொந்தம்? அரசின் பெயர் மாற்றத்தால் எழும் புதிய கேள்விகள்

ஊர் மக்களுக்கு சொந்தமானதாக, குடியிருப்பு பயன்பாட்டில் இருக்கும் கிராம நத்தம் நிலங்களை, ‘ரயத்துவாரி மற்றும் சர்க்கார்’ என, பெயர் மாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையால், பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட அளவு நிலங்கள், நலிவடைந்த மக்களின் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்படும் பழக்கம் இருந்தது.

இதன் அடிப்படையில், கிராமத்தின் மொத்த நிலத்தில் குறிப்பிட்ட அளவு ஏழை மக்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும்.

இந்நிலங்களுக்கு கிராம அளவில், ஒரு சர்வே எண் மட்டுமே ஒதுக்கப்பட்டு வந்தது. இதனால், இந்த நிலங்கள் குறித்த உரிமை விபரங்களை, வருவாய் துறையின் பதிவேடுகளில் தெளிவாக குறிப்பிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதற்கு தீர்வாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவை மற்றும் செட்டில்மென்ட் துறை, 2023 மே 4ல் அரசாணை பிறப்பித்தது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கிராம நத்தம் நிலங்களை பதிவேடுகளில் குறிப்பிடுவதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரே மாதிரியான பெயர் பயன்படுத்தப்படாத நிலையில், நத்தம் நில விபரங்களை டிஜிட்டல் மயமாக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.

பிரச்னை

இதை கருத்தில் வைத்து, கிராம நத்தம் நிலங்களை, ரயத்துவாரி மற்றும் சர்க்கார் என, இரண்டு பெயர்களுக்குள் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த பயன்பாட்டில் உள்ள கிராம நத்தம் நிலங்கள், என்ன பெயரில் இருக்க வேண்டும் என்பது தனியே பட்டியலிடப்பட்டுள்ளது.

இதன்படி, தனியார் பெயரில் பட்டா உள்ள கிராம நத்தம் நிலங்கள், மனைகள் ஆகியவை, ரயத்துவாரி மனைகள் என்று வகைப்படுத்தப்படும். நத்தம் வகைப்பாட்டில், பொது பயன்பாட்டில் உள்ள சாலைகள், கோவில், பூங்கா, இடுகாடு போன்றவை, சர்க்கார் புறம்போக்காக வகைப்படுத்தப்படும்.

தனியார் பெயரில் பட்டா இல்லாத காலி நிலம், காலி மனையாக உள்ள நத்தம் நிலங்கள், ரயத்துவாரி மனையாக வகைப்படுத்தப்பட்டாலும், அது தொடர்பான பரிமாற்றங்கள் முடக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு பிறப்பித்துள்ள இந்த ஆணை, பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. பல இடங்களில் பொது பயன்பாட்டில் உள்ள நத்தம் நிலங்கள், ஊர் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. இந்த நிலங்களை ஊர் மக்கள் பொது தேவைக்காக பயன்படுத்த வாய்ப்பு இருக்கும். தவிர்க்க முடியாத சூழலில், அரசு திட்டங்களுக்கு தேவைப்படும் போது ஊர் மக்களிடம் இருந்து இந்நிலங்கள் பெறப்படும்.

இதுகுறித்து, ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் தர்மராஜன் கூறியதாவது:

கிராம நத்தம் நிலங்களுக்கு தனித்தனி சர்வே எண்கள் ஒதுக்கப்படாத நிலையில், அவை குறித்த விபரங்களை, பதிவேடுகளில் சேர்ப்பதில் பிரச்னை ஏற்பட்டது.

இதற்காக, கிராம நத்தம் நிலங்கள் குறித்த கணக்கெடுப்பு, 1985ம் ஆண்டு அரசாணை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

இதில், தனியார் பயன்பாட்டில் உள்ள நிலங்கள் கண்டறியப்பட்டு, அதில் வசிப்போருக்கு பட்டா வழங்க, அரசு முடிவு செய்தது. பட்டா வழங்கும் போது, இந்நிலங்களை முறையாக பதிவேடுகளில் சேர்ப்பதில் பெயர் குழப்பம் ஏற்படாமல் இருக்க, இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

தமிழகம் முழுதும் ஒரே மாதிரி பெயரில் குறிப்பிட வேண்டும் என்பதே, இதன் நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நீதிமன்ற கருத்து என்ன?

கிராம நத்தம் நிலங்கள் யாருக்கு சொந்தம் என்ற கேள்வி, நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகளில் எழுப்பப்பட்டுள்ளன.இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் பிறப்பித்த உத்தரவுகள்:l வீட்டு மனையாக தனி நபர் கட்டுப்பாட்டில் இருக்கும் கிராம நத்தம் நிலங்கள், அரசின் சொத்து அல்ல.

l கிராம நத்தம் வகைப்பாட்டில் உள்ள நிலத்தை, ஒருவர் விவசாய பயன்பாட்டுக்கு மாற்றியதாலேயே, அதை கையகப்படுத்த, அரசுக்கு உரிமை உண்டு என்று கருத முடியாது.

l ஒரு சொத்து கிராம நத்தம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலையில், அதில் அரசு உரிமை கோர வழி இல்லை.

l அரசு புறம்போக்கு, கிராம நத்தம் ஆகியவை ஒரே பொருள்படும் வார்த்தைகளாக கருத முடியாதுl கிராம நத்தம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் வீடு கட்டி வசிப்பவர்களை, ஆக்கிரமிப்பாளர்களாக கருத முடியாது. இவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அகற்ற, அரசுக்கு அதிகாரம் இல்லை.

எழும் கேள்விகள்

சமூக ஆர்வலர் பி.விஸ்வநாதன் கூறியதாவது:

l இந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி, தற்போது தனியார் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ள நிலங்கள் மட்டுமே ரயத்துவாரி மனைகளாக மாறும். இந்நிலங்களை, இதன் உரிமையாளர்கள் மற்ற நிலங்களை போன்று வணிக பயன்பாட்டுக்கு மாற்றலாமா?

l இதுவரை பட்டா வாங்காமல், கிராம நத்தம் நிலங்களில் வீடு கட்டி வசிப்போருக்கு, அந்த நிலத்தின் மீதான உரிமை என்னவாகும்?

l நத்தம் செட்டில்மென்ட் பகுதிகளில், பொது பயன்பாட்டில் உள்ள நிலங்கள், சர்க்கார் புறம்போக்கு வகைப்பாட்டில் மாற்றப்படுவதால், எதிர்காலத்தில் இதன் தனித்தன்மை என்னவாகும்?

l கிராம நத்தம் நிலங்களை பதிவேடுகளில் குறிப்பிடுவதில், ஒரே சீரான பெயரை அதிகாரிகள் பயன்படுத்தாததற்கு யார் காரணம்?

ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக என்ற நத்தம் நிலங்களின் தனித்தன்மை, எதிர்காலத்தில் என்னவாகும்?

இந்த அரசாணையால், கிராம நத்தம் நிலங்கள் அரசின் ஏகபோக உரிமையில் உள்ளதா; மக்களுக்கான பொதுச்சொத்தா? என, இது போன்ற கேள்விகள் எழுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

அர்ச்சகர்களை கருவறையில் அனுமதிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

கடலூர் மாவட்ட பாசனத்திற்காக வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல்: பாஜகவால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது – முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்