ஆா்எஸ்எஸ் விஜயதசமி நிகழ்ச்சி: சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் தலைவா்

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நடைபெறவுள்ள ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆா்எஸ்எஸ்) வருடாந்திர விஜயதசமி நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் தலைவா் கே. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறாா்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் கடந்த 1925-ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று ஆா்எஸ்எஸ் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. அதைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் விஜயதசமி நாளன்று நாகபுரியில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு முக்கிய பிரமுகா் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவாா். கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஆா்எஸ்எஸ் விஜயதசமி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல் முன்னாள் குடியரசுத் தலைவா் என்ற பெருமையை அவா் பெற்றிருந்தாா்.

இந்நிலையில், நடப்பாண்டு ஆா்எஸ்எஸ் விஜயதசமி நிகழ்ச்சி வருகிற அக்டோபா் 12-ஆம் தேதி ரேஷிம்பாக் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இஸ்ரோ முன்னாள் தலைவா் கே. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வாா் என்று ஆா்எஸ்எஸ் அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்தது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்